பொறியியல் கனவு தகர்ந்த சோகம்! 7.5% இட ஒதுக்கீடு சிக்கலில் தவிக்கும் அரசு பள்ளி மாணவி!
விழுப்புரம் அருகே பள்ளியளவில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவி, கவுன்சிலிங்கின்போது, இ - சேவை மையத்தில் தவறான தேர்வு அளித்ததால், 7.5 சதவீதம் அரசு ஒதுக்கீடு வாய்ப்பை விட்டு தவித்து வருகிறார்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பள்ளியளவில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவி, கவுன்சிலிங்கின்போது, தனியார் இ-சேவை மையத்தில் தவறான சாய்சை அளித்ததால், 7.5 சதவீதம் அரசு ஒதுக்கீடு பொறியியல் சேர்க்கை வாய்ப்பை விட்டு தவித்து வருகிறார்.
7.5 சதவீதம் ஒதுக்கீடு பொறியியல் சேர்க்கை வாய்ப்பை விட்டு தவிக்கும் மாணவி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள அத்தியூர் திருக்கையை் சேர்ந்தவர் அய்யனார். இவர் கூலித் தொழிலாளி. இவரது மகள் வினிதா. அதே கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். பொறியியல் படிப்பதற்காக, அண்ணா பல்கலைக் கழக சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பிரிவில் சேர்ந்து படிக்க முயன்ற நிலையில், கவுன்சிலிங்கின்போது, தனியார் இ - சேவை மையத்தில் தவறான சாய்சை அளித்ததால், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடில் வாய்ப்பை இழந்து தவித்து வருகிறார்.
இதுகுறித்து, மாணவி வினிதா கூறியதாவது:
நான் விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருக்கை அரசு மேல்நிலை பள்ளியில் படித்து, பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று, 600க்கு 521 மதிப்பெண் எடுத்தேன். பொறியியல் படிக்க விண்ணப்பித்திருந்தேன். 1ம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வரை அரசு பள்ளியில் படித்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீடில் படிக்க விரும்பி கவுன்சிலிங்கில் பங்கேற்றேன். முதலில், விழுப்புரம் அருகே ஒரு தனியார் கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க சீட் கிடைத்தது.
தனியார் இ-சேவை மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்தலில் சிக்கல்
என்னால் தினசரி கல்லூரிக்குச் சென்று செலவு செய்து படிக்க முடியாது என்பதை உணர்ந்து, அந்த சேர்க்கையை நாங்கள் ஏற்காமல், தங்கும் விடுதியுடன் கூடிய கல்லுரியில் படிப்பதற்காக அடுத்த கவுன்சிலிங்கிற்கு முயற்சித்தோம். இதற்காக தனியார் இ-சேவை மையத்திற்கு சென்று, மீண்டும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தோம்.
அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீடு பிரிவில் விண்ணப்பிக்க நான் சொன்னதை கவனிக்காமல், தவறுதலாக பொது பிரிவு சேர்க்கை பிரிவில் விண்ணப்பித்து விட்டனர். இதனால், எனக்கு சேலம் பாரதியார் மகளிர் கல்லுாரியில் இடம் கிடைத்தது. ஆனால், எனது பெற்றோர் சென்னையில் கூலி வேலை செய்வதால், சேலத்தில் தங்கி படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இருப்பினும், ஓராண்டு படிப்பு வீணாகிவிடும் என நினைத்து, 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி சேர்த்தனர். தொடர்ந்து கடன் வாங்கி படிக்க வைக்க முடியாது என்பதால், எனது பெற்றோர் என்னை படிக்க வேண்டாம் என நிறுத்தி விட்டனர். இதனால், எனக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீடில், ஏதேனும் ஒரு விடுதியுடன் கூடிய கல்லுாரியில் சேர்க்கை வழங்கி, எனது பொறியியல் கனவை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி வினிதா கூறினார்.





















