கல்விக்கு என்ன விடியல் தந்தார் ஸ்டாலின் ? - பணியிடமாற்றம் செய்யப்பட்ட கல்லூரி முதல்வர் வேதனை பேட்டி
’’நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆசிரியர்கள் பணி செய்வதில்லை. பணி செய்ய மறுக்கின்ற ஜாதியத்தை துாண்டுகின்ற சிலர் கல்லுாரியில் மாணவர்களுக்கு இடையே கலவரங்களை துாண்டிவிடுகின்றனர்’’
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் அமைந்துள்ள கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் திண்டிவனம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஏராளமான மாணவர்கள் உயர்கல்வியை பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் அடிக்கடி போராட்டங்கள், வன்முறைகள் நிகழ்வது வழக்கம். இந்நிலையில் கல்லூரி முதல்வர் இன்று செய்தியாளர்களை சந்தித்திப்பின் போது கூறியதாவது, என் மீது பொய்யான புகாரை கொடுத்து, மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர் என பணியிட மாற்றம் செய்யப்பட்ட கல்லூரி முதல்வர் குற்றம் சாட்டி உள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில் முதல்வராக பணிபுரிந்து வருபவர் பால் கிரேஸ். இவர் கடந்த 26ஆம் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கல்லுாரியில் இருந்த அம்பேத்கர் படத்தை அகற்றியதாக, விழுப்புரம் மாவட்ட எஸ்.சி-எஸ்.டி, கண்காணிப்பு குழுவினரால், கலெக்டரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், மாற்றம் செய்வதாக, அரசின் முதன்மைச் செயலர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பால் கிரேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த கல்லுாரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆசிரியர்கள் பணி செய்வதில்லை. பணி செய்ய மறுக்கின்ற ஜாதியத்தை துாண்டுகின்ற சிலர் கல்லுாரியில் மாணவர்களுக்கு இடையே கலவரங்களை துாண்டிவிடுகின்றனர். கண்டிப்புடன் இருக்கும் என்னை ஜாதி பெயரில் என் மீது பொய்யான புகார் கொடுத்தனர். கல்லுாரி சேர்க்கையில் இடம் கிடைக்காத ஆத்திரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எனக்கு எதிராக கோஷம் எழுப்பி, என்னை பற்றி சுவரொட்டி ஒட்டினர். தற்போது எனக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
என்னுடைய பொறுப்பை மூத்த பேராசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளனர். நான் யாரை பிரச்னைக்கு காரணம் என குற்றம் சாட்டினேனோ அவரிடமே பொறுப்பை ஒப்படைக்க கூறுகின்றனர். இந்த கல்லுாரியில் பணியாற்றும் பிறப்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்களை பழிவாங்கும் வகையில் செயல்படுகின்றனர். நேர்மையாக செயல்படும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பில்லை. குறிப்பாக கல்லூரி பெண் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பில்லை. ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போராரு என சென்னார்கள். கல்விக்கு என்ன விடியல் தராரு. கல்லூரியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் முன்னேற வேண்டாமா இந்த கல்லுாரி பிரச்னை குறித்து முதல்வர் உள்ளிட்ட யாரும் கண்டுகொள்ளவில்லை என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்