Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?
Vikravandi By-election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக, முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாக்கு சேகரித்துள்ளார்.
Vikravandi By-election: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமைச்சர்களின் ஆலோசனையின் பேரில் தான், முதலமைச்சர் ஸ்டாலின் நேரடி பரப்புரை மேற்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த தொகுதியில் வரும் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
பிரதான வேட்பாளர்கள் விவரங்கள்
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டண் சார்பில் பாமகவின் சி. அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயாவும் வேட்பாளர்களாக உள்ளனர். அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, 29 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தலைவர்கள் தீவிர பரப்புரை:
வாக்குப்பதிவு நெருங்குவதை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சார்பில் முக்கிய அமைச்சர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வரும் 6,7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், அமைச்சர் உதயநிதியும் விக்கிரவாண்டி தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட உள்ளார். பாமக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி தலைவர் அன்புமணி தனது குடும்பத்துடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், பாமக வேட்பாளருக்கு ஆதரவான பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் மூலை முடுக்கெல்லாம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனால் விக்கிரவாண்டி இடைதேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு:
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு வாக்களிக்க வலியுறுத்தி, முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர், இந்த மாதம் கூடுதலாக 1.48 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகை பெற உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதிக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தது திமுக ஆட்சி. பாஜக கூட்டணியை தோற்கடிப்பதன் மூலம் சமூக நீதிக்கு துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஸ்டாலின் நேரடி பரப்புரை மேற்கொள்ளாதது ஏன்?
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படி இருக்க முதலமைச்சர் ஸ்டாலின் நேரடி தேர்தல் பரப்புரையில் ஈடுபடாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம், முதலமைச்சர் நேரடி பரப்புரை மேற்கொள்ளாததற்கு அமைச்சர்களின் ஆலோசனையே காரணம் என கூறப்படுகிறது.
அமைச்சர்கள் சொன்னது என்ன?
முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்தாலுமே, விக்கிரவாண்டி தேர்தல் தொடர்பாக பொறுப்பு அமைச்சர்களிடம் தொலைபேசி வாயிலாக அவ்வப்போது பேசி தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அப்படி அமைச்சர் பொன்முடி, எம்.பி., ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் முதலமைச்சரிடம் பேசுகையில், “ தலைவரே நீங்க உடம்ப பாத்துக்காங்க. நம்ப எதிரியான அதிமுகவே களத்துல இல்லை. பாமக தான் போட்டியிடுது. இதனால நீங்க வந்து நேரடியா பரப்புரை செய்யனும்னு அவசியம் இல்லை. வெற்றியோட நாங்களே வந்து உங்கள பாக்குறோம்” என கூறியதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பேரிலேயே முதலமைச்சர் நேரடியாக தேர்தல் பரப்புரையில் ஈடுபடவில்லை என தெரிகிறது.
கள்ளச்சாராய விவகாரம் தான் காரணமா?
அதேநேரம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரா விவகாரம் காரணமாகதான், ஸ்டாலின் நேரடியாக பரப்புரையில் ஈடுபடவில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. அந்த மாவட்டத்தின் கருணாபுரம் பகுதியில், அண்மையில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மரக்காணத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சியிலும் கள்ளச்சாராயத்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது, திமுக ஆட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த சூழலில் பரப்புரையில் ஈடுபட்டால், அதுதொடர்பான கேள்விகளையும், மக்களின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனை தவிர்க்கவே, முதலமைச்சர் ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நேரடி பரப்புரை மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.