விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆனதையொட்டி கரூரில் அமைதி ஊர்வலம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், கரூர் மாவட்ட தேமுதிக சார்பாக 30-வது நாள் அனுசரிக்கும் விதமாக அனைத்து கட்சியினரின் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
கரூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி நடந்த அமைதி ஊர்வலத்தின் போது தொண்டர்களை தகாத வார்த்தையில் ஒருமையில் பேசிய காவல் ஆய்வாளரிடம் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், கரூர் மாவட்ட தேமுதிக சார்பாக 30-வது நாள் அனுசரிக்கும் விதமாக அனைத்து கட்சியினரின் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா முதல் கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான தேமுதிகவினர், விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர், அதிமுக மற்றும் மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலத்தின் இடையே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, கரூர் நகர காவல் ஆய்வாளர் ஜெகநாதன் தேமுதிக தொண்டர்களை சாலை ஓரமாக போக சொல்லி, தகாத வார்த்தையில் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தேமுதிக தொண்டர்கள் காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விஜயகாந்த நினைவஞ்சலி ஊர்வலத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.