Vijayakanth Death: கரூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் விஜயகாந்த் மறைவுக்கு கவுன்சிலர்கள் இரங்கல்
கூட்டம் முடிந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் தண்டபாணி தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கரூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் சுதா, மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
அவை கேள்வி நேரத்தின்போது திமுக கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன்பாபு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் தண்டபாணி ஆகியோர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை வசூலிக்க மூன்று மாத காலம் அவகாசம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
அப்போது மேயர் கவிதா கணேசன் மூன்று மாத கால அவகாசம் கொடுப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் மாமன்ற உறுப்பினர்கள் கை தூக்கலாம் என்று தெரிவித்தார். அதற்கு ஆதரவு தெரிவித்து பெருவாரியான உறுப்பினர்கள் கை உயர்த்தியதால் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் தண்டபாணி தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். இரங்கல் தீர்மானத்திற்கு மேயர் ஒப்புதல் அளித்ததன் பேரில், ஏக மனதாக மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.