RIP Vijayakanth: மீளா துயிலில் கலந்தார் விஜயகாந்த் : சந்தனப் பேழைக்குள் அடங்கியது கருப்பு வைரம்
RIP Vijayakanth: ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என எழுதப்பட்ட சந்தனப்பேழையில் வைத்து நடிகர் விஜயகாந்தின் உடல் சற்று முன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் கண்ணீர் வெள்ளத்தில் நனைய, நடிகர் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விடைபெற்றார் விஜயகாந்த்
இன்று மாலை தீவுத்திடலில் தொடங்கி ஊர்வலமாக மீண்டும் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்ட நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு, முன்னதாக 72 குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதை செலுத்தபட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்த் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய நிலையில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அமைச்சர் கே.என் நேரு, அமைச்சர் உதயநிதி ஆகியோர் இந்த இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என எழுதப்பட்ட சந்தனப்பேழையில் வைத்து நடிகர் விஜயகாந்தின் உடல் சற்று முன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தார் கண்ணீர்மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
‘இதயத்தில் நிரந்தரமாக வாழ்வீர்கள்’
தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு உணவளிப்பதை கொள்கையாகக் கொண்டு செயல்பட்ட விஜயகாந்தின் நினைவுகூரும் வகையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகம் முன்பாக இன்று காலையில் இருந்து கூடியிருக்கும் தொண்டர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய் தொடங்கி, பிரபு, சத்யராஜ், வாகை சந்திரசேகர், ராதா ரவி, விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, குஷ்பு, சுந்தர். சி, பார்த்திபன், சுகன்யா, கௌதமி, எம்.எஸ்.பாஸ்கர், ராம்கி, கவுண்டமணி, அர்ஜூன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தீவுத்திடலில் இன்று மதியம் 2.00 மணிக்குத் தொடங்கிய நடிகர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் அலைகடலென லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், “எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே” என முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே...#CaptainVijayakanth pic.twitter.com/DaBkTcuR6n
— M.K.Stalin (@mkstalin) December 29, 2023
விஜயகாந்த் இல்லாத வெற்றிடத்தை எண்ணி மேலும் பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.