Vijayadashami 2024: விஜயதசமி பண்டிகை! தமிழ்நாடு முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் இயங்கும் - எதற்காக?
விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்காக தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகள் நாளை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆயுத பூஜையும், விஜயதசமியும் எப்போதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விஜயதசமி பண்டிகையின்போது பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
விஜயதசமி:
இன்று ஆயுத பூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சூழலில், நாளை விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. விஜயதசமி பண்டிகையில் தனியார் பள்ளிகள் மட்டுமின்றி அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு ஏதுவாக, விஜயதசமி பண்டிகை நாளான நாளை பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் திறந்திருக்கும்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை:
விஜயதசமி நாளில் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நெல்லில் அ என்ற அகர வரிசையில் எழுத வைத்து பள்ளிகளில் சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். விஜயதசமி நாளில் குழந்தைகளை கல்வி நிலையங்களில் சேர்ப்பதால் தங்களது பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்று பெற்றோர்கள் நம்பும் காரணத்தால் இந்த நாளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
தனியார் பள்ளிகளிலும் நாளை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன் காரணமாக தனியார் பள்ளிகளும் நாளை இயங்க உள்ளது. நாளை மட்டும் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்வார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை எதிர்பார்க்கிறது.
தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கைகளில் விஜயதசமியில் மாணவர் சேர்க்கை நடத்துவதையும் அரசு மேற்கொண்டுள்ளது. தமிழக அரசுப்பள்ளிகளில் வேலை நாட்களையும் 210 நாட்களாக திருத்தி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.