Vijay Sethupathi: “கோர்ட்டில் ஆஜராக வேண்டுமா? சம்மனை ரத்து செய்யுங்கள்” - வழக்கு தொடர்ந்த விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு நாளை மறுதினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது.
நடிகர் மகா காந்தி தொடர்ந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூர் சென்றார். அங்கு விமான நிலையத்தில் நடந்து சென்ற விஜய் சேதுபதி மீது திடீரென்று ஒரு நபர் எட்டி உதைத்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். பின்னர், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதனைத்தொடர்ந்து, விஜய் சேதுபதியை தாக்கிய நபர் சென்னையைச் சேர்ந்தவர் நடிகர் மகா காந்தி என்று தெரியவந்தது.
விமானத்தில் நடிகர் மகாகாந்திக்கும், விஜய்சேதுபதியின் மேலாளர் ஜான்சனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்த வாக்குவாதத்தின்போது மகாகாந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் விஜய்சேதுபதியை எட்டி உதைத்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதியை எட்டி உதைத்தவர், விஜய் சேதுபதி மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், சைதாபேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நாளை மறுதினம் விசாரணை வருகிறது.
முன்னதாக, இந்தச் சம்பவம் தொடர்பாக, மகா காந்தி சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த நவம்பர் மாதம் 2-ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக பெங்களூர் விமான நிலையத்தில் காத்திருந்தபோது, நடிகர் விஜய்சேதுபதியை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தபோது அதனை ஏற்க மறுத்து, விஜய்சேதுபதி பொதுவெளியில் தம்மை இழிவாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய தம் மீது விஜய் சேதுபதியின் மேலாளர் ஜான்சன் காதில் அறைந்ததார். இதனால், தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உண்மை சம்பவங்கள் இவ்வாறு இருக்க, கடந்த மாதம் 3-ந் தேதி விஜய்சேதுபதி தாக்கப்பட்டதாக அவர் தரப்பில் அவதூறு பரப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
திரைத்துறையில் உள்ள சக நடிகரை பாராட்டச் சென்ற என்னை தாக்கி, அதை உண்மைக்கு புறம்பான செய்தியாக மாற்றியதற்காக. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.