Vijay rolls royce: ‛அபராதம் என்கிற பெயரில் கொரோனா நிவாரண நிதி செலுத்த முடியாது’ -நடிகர் விஜய் தரப்பு பதில்!
கடந்தாண்டு ஏற்கெனவே கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் விஜய் தரப்பு விளக்கம்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் அபராதம் கட்ட தயாராக இல்லை என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். அபராதம் செலுத்திவிட்டு அறிக்கை தர உத்தரவிட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜய் தரப்பு விளக்கமளித்துள்ளது.
சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு இன்று தனி நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ரூ.1 லட்சம் அபராதத்தை ஏன் கொரோனா நிவாரணமாக வழங்கக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஏற்கெனவே கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு சொகுசு வரி செலுத்த தடைகோரிய விஜய் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
முந்தைய அமர்வில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவுக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் ’நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும் ரீல் ஹீரோக்களாக அல்ல’ எனக்கூறி வரி விலக்கு கேட்ட விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தது தனிநீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார். தனிநீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விஜய் தாக்கல் செய்த மேல்முறையிட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. ரோல்ஸ்ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை கட்ட தயாராக உள்ளதாகவும் தனிநீதிபதியால் விதிக்கப்பட்ட ஒரு லட்சம் அபராதத் தொகையையும் அவர் தன் மீது பதிவு செய்த கருத்துகளையும் நீக்க வேண்டும் எனவும் நடிகர் விஜய் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் துரைசாமி மற்றும் ஹேமலதா ஆகியோரின் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனுவில், நடிகர் விஜய்யின் சார்பாக மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயணன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். வரிவிலக்கு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் நடிகர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை தனிநீதிபதி பயன்படுத்தி உள்ளதாக கூறிய விஜய்தரப்பு வழக்கறிஞர் விஜய்நராயணன், கடுமையான வார்த்தைகள் மூலம் நடிகர் விஜய்யை தேசவிரோதி போல தனிநீதிபதி சித்தரித்தது அவசியமற்றது என்றனர்.
என்ன தொழில் செய்கிறேன் என்பதை சொல்ல வேண்டியது தேவையற்றது எனவும் வரிமுறை பற்றி விளக்குங்கள் என நாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை எனவும் நீதிபதிமன்றத்தில் தெரிவித்துள்ள விஜய் தரப்பு வழக்கறிஞர், 9 ஆண்டுகளாக ஒரு மனுவை நிலுவையில் வைத்திருந்தது எங்கள் தவறல்ல என தெரிவித்துள்ளதுடன், வரி விதிப்பை எதிர்த்து முறையீடு செய்ய ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உண்டு என வாதிட்டார்.
ஒரு வாரத்திற்குள் நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவுவரியை செலுத்தி விடுவார் என்றும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல் விஜய்க்கு எதிரான கருத்துகளை கூறிவிட்டு ஒரு லட்சம் அபராதத்தையும் தனிநீதிபதி விதித்துவிட்டதாக கூறியுள்ள விஜய்யின் வழக்கறிஞர், மனுதாரர்களுக்கு எதிராக இழிவுபடுத்தும், கடுமையான வார்த்தைகளை நீதித்துறை பயன்படுத்த கூடாதென உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை நினைவுபடுத்தினார். தேவையற்ற கருத்துகளையும் அபராதத்தையும் நீக்க வேண்டும் என்றும் எந்த மனிதனுக்கும் எதிர்மறை விளம்பரம் காயத்தை உண்டாக்கும் எனவும் விஜய்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.