(Source: ECI/ABP News/ABP Majha)
தீபாவளி வசூல் தொடர்பாக 46 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: 1.12 கோடி பறிமுதல்....!
இந்த திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 1.12 கோடி ரூபாயும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
தீபாவளி வசூல் புகார் தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சோதனைகளில் மொத்தம் 46 அரசு அலுவலகங்களில் இருந்து ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 1.12 கோடி ரூபாயும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
Ahead of #Deepavali Anti-Corruption Police #TamilNadu conduct searches in various government offices across the State and seize Rs 1.12 crore unaccounted cash of which Rs 75 lakh seized in the guest house of #Tiruvarur Highways Department #DVAC details here pic.twitter.com/D3AqQAWrPh
— Vijay Kumar S (@vijaythehindu) October 14, 2022
முக்கியமாக திருவாரூர் கோட்டப் பொறியாளர், நெடுஞ்சாலை விருந்தினர் விடுதியில் இருந்து மட்டும் கணக்கில் காட்டப்படாத 75 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் கன்னியாகுமரியில் டாஸ்மாக் மேனேஜர் அறையிலிருந்து ஒரு லட்சத்து எழுபத்து ஏழாயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகை நெருங்க நெருங்க உயர் அதிகாரிகளுக்கு தீபாவளி பரிசு என்ற பெயரில் பெருமளவு லஞ்ச பணம் பெறுவதாக வந்த புகார்களின் பேரில் பல மாவட்டங்களிலும் இந்த சோதனைகள் நடைபெற்று வந்தன.
இச்சூழலில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த சோதனைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாகக் கடந்த மாதம் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு 3.98 லட்ச ரூபாய் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க ஒப்புதல் சான்றிதழ் வழங்க ஊழல் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வரும் சீரங்க பாளையத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மனோகர், சூரமங்கலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வசந்தகுமார், ஜான்சன் பேட்டையில் உள்ள மருத்துவ பேராசிரியர் சுஜாதா ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையை மேற்கொண்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார் விஜயபாஸ்கர், தன்னுடைய பதவி காலத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு சான்றிதழ் ஒன்றை அளித்துள்ளார். அதாவது அந்த மருத்துவமனை புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க தகுதியான ஒன்று என்று ஒப்புதல் சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இந்தச் சான்றிதழை வாங்கும் போது அந்த மருத்துவமனை 300 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இரண்டு வருடங்களாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த அனுமதி சான்றிதழ் வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை புகாரை பதிவு செய்துள்ளது. மேலும் இந்தப் புகார் தொடர்பாக ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும் , மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் ஆகியவற்றில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
அதேபோன்று அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி பணியாற்றி வந்தபோது தெரு விளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி பல்புகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக சேலம், தருமபுரி, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் எல்.இ.டி பல்புகள் வாங்கிய டெண்டரில் சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் வந்த நிலையில், சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட 26 இடங்களிலும் சோதனை இது தொடர்பாக சோதனை நடைபெற்றது.