"பாஜக அலுவலகமாக மாறிவிட்ட தேர்தல் ஆணையம்" விடுதலை சிறுத்தைகள் கட்சி விமர்சனம்!
மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 22 நாள்களே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தங்களுக்கான சின்னத்தை பெறுவதில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், பானை சின்னத்தை பெற விடுதலை சிறுத்தைகள் கட்சி முயற்சி மேற்கொண்டது.
தேர்தல் ஆணையத்தின் முடிவால் விசிக ஷாக்:
கடந்த இரண்டு தேர்தல்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிட்டது. எனவே, அதே சின்னத்தை பெற அக்கட்சி முனைப்பு காட்டியது. இதற்காக, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், விசிகவின் மனுவை பரிசீலித்து இன்றே முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவை விமர்சித்துள்ள அக்கட்சி, மிகப்பெரிய சனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருப்பதாக கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் கு. கா. பாவலன் கூறுகையில், "இந்த நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது. வேறு எந்த கட்சிகளும் பானை சின்னத்தை பயன்படுத்தாத நிலையிலும் அல்லது பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்காத நிலையிலும் தேர்தல் ஆணையம் இத்தகைய ஓரவஞ்சனையில் ஈடுபட்டிருக்கிறது.
"பாஜக அலுவலகமாக மாறிவிட்ட தேர்தல் ஆணையம்"
ஏற்கனவே மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தங்களுக்கான சின்னத்தை கேட்டு விண்ணப்பிக்கும் போதும் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. ஆனால், பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னமும் அமமுகவுக்கு குக்கர் சின்னமும் ஒதுக்கி இருக்கிறது.
ஆனால், ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அத்துடன் தமிழ்நாட்டில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் வெற்றியடைந்த நிலையில் பானை சின்னத்தை ஒதுக்குவதில் எந்த விதமான சட்ட சிக்கலும் இல்லை.
அப்படியிருந்தும் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் விதமாக இந்த உத்திகளை கையாண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் பாஜக அலுவலகமாக மாறிவிட்டதாகவே அனைவராலும் உணர முடிகிறது.
நாங்கள் மீண்டும் உச்சநீதி மன்றத்தை நாடி மேல்முறையீடு செய்வோம். பானை சின்னத்தை உச்ச நீதிமன்றத்தின் வழியாக மீண்டும் பெறுவோம் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" என்றார்.
சின்னம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சமர்பித்த விண்ணப்பதில் தேவையான தகவல்களை அளிக்கவில்லை என்றும் பொதுச் சின்னம் ஒதுக்குவதற்கான தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.