பின்வாசல் வழியாக வருகிறது ஸ்டெர்லைட் ஆலை - நித்யானந்த் ஜெயராமன் குற்றச்சாட்டு..
உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் சுகாதார தேவைக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று தெரிவித்தார்.
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி தரவேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் சுகாதாரத் தேவைக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று தெரிவித்தார். சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமுகச் செயற்பாட்டாளருமான நித்யானந்த் ஜெயராமன் அளித்த சிறப்பு நேர்காணல் இங்கே:
ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட இரண்டு முறை உத்தரவிடப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமான கந்தக-டை-ஆக்சைடு (SO2) எனும் நச்சு வாயு வெளியான காரணத்தினால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதன், காரணமாக 2013 அன்று ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவினர் ஆலைக்கு சென்று சீல் வைத்தனர். இரண்டாவதாக, 2018 மே மாதம் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தர மூடப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டது. உரிமம் நிபந்தனை வழிகாட்டுதல்களில் வேதாந்தா நிறுவனம் மிகவும் அலட்சியமாக இருந்தது வேதனையளிப்பதாக தெரிவித்த நீதிமன்றம் ஆலைக்கு சீல்வைத்து மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கை சரியானது தான் என்பதை உறுதிபடுத்தியது.
ஆனால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஆலையை திறக்க அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனுவில் இந்த இரண்டு மூடல் உத்தரவுகளை வேதாந்தா நிறுவனம் குறிப்பிடவில்லை. முந்தைய வரலாறுகளை திட்டமிட்டு மறைப்பதாய் உள்ளது.
ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் 2004-ஆம் ஆண்டு எந்தவித சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டது. 2004 அக்டோபரில் உச்சநீதிமன்ற ஆய்வுக் குழு உத்தரவால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியக் குழுவும் இதனை உறுதிபடுத்தியது. ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் உள்ளடக்கிய ஒரு உருக்காலை வளகாத்தை எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். 2004-ஆம் ஆண்டில் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளை சென்னை உயர்நீதிமன்றம் விரிவான விமர்சனத்துக்கு உட்படுத்தியது. இதன் அடிப்படையில் தான் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதை உறுதி செய்தது.
ஸ்டெர்லைட்டில் தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியுமா?
நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேடினை விளைவித்த நிறுவனம் வேதாந்தா. இது அரசாங்கத்தாலும், நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்ட ஒன்று. சுற்றுச்சூழல் மீறல்கள் பாதுகாப்பு குறைபாடுகள், அலட்சியப்போக்கு இதுதான் அந்நிறுவனத்தின் வரலாறாக உள்ளன. கடந்த மார்ச் மாதம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு விபத்தை நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிறுவனம், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் இயங்கி வந்த்தது. அப்பாவி மக்கள் 11 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலை சுற்றி 5 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. கடந்தாண்டு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இரண்டு மாதங்கள் கழித்து திறக்கப்பட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பிரச்சனை எழாதா?
இது தொடர்பாக நேற்றைய தினம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினசரி 400 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. மாநிலத்தில் நாளொன்றுக்கு 250 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா போதுமான மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தியைக் கொண்டுள்ளன. தமிழகம் (400 மெட்ரிக் டன் ) கேரளா (246 மெட்ரிக் டன்) உள்ளிட்ட மாநிலங்கள் ஆக்ஸிஜன் கிடைக்கும் மாநிலங்களாக கருதப்படுகின்றன.
மேலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு 65 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை வழங்கியதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக அரசு நேற்று தெரிவித்திருக்கிறது. கர்நாடகாவில் ஆக்ஸிஜனின் தினசரி உற்பத்தி 812 மெட்ரிக் டன்னாக உள்ளது. இதில், அம்மாநிலத்திற்கு 300 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே மத்திய அரசு ஒத்துக்கிட்டுள்ளது. மீதம் ஆக்ஸிஜன் தேவைப்படும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனவே, ஆக்ஸிஜன் உற்பத்தி திறனில் முக்கியத்துவம் கொடுப்பதை விட, ஆக்ஸிஜன் விநியோகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
விநியோகம் குறித்து என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
எஃகு ஆலைகளில் இருந்து கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தவேண்டும். தமிழகத்தில் செயல்படும் பொதுத்துறை எஃகு ஆலைகளில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். மாநிலத்துக்கள் ஆக்ஸிஜன் டேங்கர்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்ய வேண்டும். ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பும் ஆலைகளும், போதிய பாதுகாப்புடன் 24 மணிநேரமும் இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்.
உதாரணமாக, மகாராஷ்டிரா மாநிலம் சரியான திட்டமிடல் காரணமாக தோல்வியில் உள்ள ஜேஎஸ்டபிள்யூ எஃகு ஆலை, சட்டீஸ்கர் பிலாய் பகுதிகளில் உள்ள செயில் நிறுவன எஃகு ஆலை, கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள ஜேஎஸ் டபிள்யூ எஃகு ஆலை ஆகியவைகளிலிருந்து தினசரி மருத்துவ ஆக்ஸிஜன் பெற்று வருகிறது. பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பொது சுகாதார மையங்களில் மலிவான சிறிய அளவிலான பிரத்யேக அழுத்த விசை உறிஞ்சுதல் (பிஎஸ்ஏ) பிராணவாயு தயாரிப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.
அவசர காலங்களில் மத்திய/ மாநில அரசுகள் என்ன செய்யலாம்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மாநிலத்தின் ஆக்ஸிஜன் தேவை அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதே சூழல் நாடு முழுவதும் காணப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக, வேதாந்தா நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் இழுத்து மூடி சீல் வைத்துள்ளனர். எனவே, அது தற்போது தமிழக அரசின் பராமரிப்பில்தான் உள்ளது. எனவே, அங்கு மத்திய/ மாநில அரசுகள் வேதாந்தா நிறுவனத்தின் தலையீடு இல்லாமல் தன்னிச்சையாக ஆக்ஸிஜன் உற்பத்தியில் ஈடுபட வேண்டும். கொள்ளை நோய்கள் சட்டம் 1897 பகுதி 2-இல் அதற்கான வழிமுறைகள் உள்ளன. மேலும், 1940 வருட மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்திலும் இதற்கான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆக்ஸிஜன் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு வேதாந்தா நிறுவனம் முன்னெடுக்கும் 'தேசிய நலன்' இல்லை என்பதுதான் எனது அதிகப்படியான வாதம். மீண்டும் ஆலையை தமிழகத்தில் திறக்கவேண்டும் என்ற ஒற்றை எண்ணத்துடன் தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தேச நலன் முக்கியம் என்று வேதாந்தா கூறுவது?
உங்களால், வேதந்தா நிறுவனத்தை தேச நலனில் அக்கறை கொண்டவர்களாக பார்க்க முடிகிறதா?