ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்! - திருமாவளவன் சொல்வது என்ன?
10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்துக்குள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரில் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை
ஆம்ஸ்ட்ராங் அவரது கட்சி அலுவலகத்துக்கு அருகே கொலை செய்யப்பட்டிருப்பது தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். இதுகுறித்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அளித்த விளக்கத்தில், “10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்துக்குள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேரில் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. மேலும் பிற குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. கொலைக்கான காரணம் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரித்த வரையில் கொலைக்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. ஆம்ஸ்ட்ராங்க் மீது 7 வழக்குகள் நிலுவலையில் இருந்தன. ஆனால் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆம்ஸ்ட்ராங் உடல் அவரது கட்சி அலுவலக வளாகத்திற்குள் நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதனை அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கொலையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது சரணடைந்து இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
சரண் அடைந்தவர்களை கைது செய்து விட்டோம் என்ற அடிப்படையில் புலன் விசாரணை நிறுத்தி விடக்கூடாது. உண்மையான குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
ஆம்ஸ்ட்ராங் பொதுமக்களுக்காக தலையிடுபவர். அதற்காக அவருக்காக ஆங்காங்கே பகை எழுந்து இருக்கிறது. அதற்குரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் வழங்கவில்லை. அது அதிர்ச்சி அழிக்கிறது.
தமிழ்நாட்டில் தலித்துக்கள், தலித் இளைஞர்கள் குறிப்பாக தமிழக தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடிக்கிறது. இன்று ஒரு அரசியல் தலைவர் அவரது இல்லத்தின் அருகிலேயே கொல்லப்பட்டிருக்கிறார். இது காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால்.
கூலிப்படைகளை, கொலைகார கும்பலை அடையாளம் கண்டு அவர்களை கட்டுப்படுத்த தவறினால் அரசுக்கு மேலும் இதனால் களங்கம் ஏற்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.