யார் அந்த சார்? - திரும்ப திரும்ப திமுக அரசை சீண்டும் திருமா! கூட்டணியில் மீண்டும் சிக்கலா?
அந்த வகையில் அண்ணா பல்கலை வளாகத்தில், பாலியல் வன்கொடுமை தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட, அந்த குற்றச்செயல் வேதனையை உண்டுபண்ணியிருக்கிறது.
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் உள்நோக்கமின்றி போராட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “மலேசியா பிணாங்கு பகுதியில் ஜனவரி 4 மற்றும் 5ஆம் தேதிகளில் உலகத் தமிழர் வம்சாவளி மாநாடு நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக மலேசியா செல்கிறேன். பல அரசியல் கட்சி தலைவர்களும் அதில் பங்கேற்கின்றனர். அமைச்சர் பெருமக்களும் பங்கேற்கின்றனர். தொழிலதிபர்களும் இரண்டாவது நாள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ள சூழலில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என விசிக தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம், வேண்டுகோளும் விடுத்திருக்கிறோம். அந்த வகையில் அண்ணா பல்கலை வளாகத்தில், பாலியல் வன்கொடுமை தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட, அந்த குற்றச்செயல் வேதனையை உண்டுபண்ணியிருக்கிறது.
கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி வேறு நபர்கள் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. ஆகவே அரசு குறிப்பாக காவல்துறை நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்கக் கூடாது. அவரை சிறையில் வைத்தபடியே புலன்விசாரணையை முடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.
யார் அந்த சார் என்ற கேள்விக்குத்தான் நேர்மையான விசாரணை தேவை என்று வலியுறுத்துகிறேன். போராட்டம் நடத்த முழுமையாக அனுமதி மறுக்கப்படவில்லை. அனுமதி கொடுக்கப்பட்டு சில போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. இதே பிரச்சினைக்கு பலர் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இதைவைத்து அரசியல் செய்ய வேண்டும் என சிலர் போராட்டங்களில் ஈடுபட முயல்கின்றனர். அரசு அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைப்பதாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் அரசு, எதிர்க்கட்சிகளுக்கு போராட வாய்ப்பு தர வேண்டும் என்பதே விசிகவின் வேண்டுகோள்” எனத் தெரிவித்தார்.
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் யாரிடமோ போனில் சார் என்று பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியதாக புகார் எழுந்தது. அதனால் யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அதிமுக, பாஜக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. அந்த வரிசையில் தற்போது விசிக தலைவர் திருமாவளவனும் நியாயமான விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்தாலும் அவ்வபோது பல்வேறு பிரச்சினைகளில் அரசுக்கு எதிரான கேள்விகளை முன் வைத்து போராட்டங்களும் நடத்தி வருகிறது. இதனால் கூட்டணியில் சிக்கலா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதற்கு பதிலளித்த திருமா கூட்டணியில் சிக்கல் இல்லை என தெரிவித்து வந்தார்.
ஏற்கெனவே அரசுக்கு எதிராக மது ஒழிப்பு மாநாட்டை நடத்தி விசிக பேசுபொருளாக மாறியது. அதையடுத்து அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜயுடன் திருமா பங்கேற்க கூடாது என திமுக அழுத்தம் கொடுத்ததாகவும் இதனாலேயே திருமா அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார் எனவும் சொல்லப்பட்டது. இதுமட்டுமில்லாமல் விசிக, தவெக கூட்டணிக்கோ அதிமுக கூட்டணிக்கோ மாற வாய்ப்பு உள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் தான் அதிமுக பாஜக முன்வைக்கும் அதே பிரச்சினையை திருமாவும் முன் வைத்துள்ளார்.