Vijay Thiruma: எனக்கே ஸ்கெட்ச்சா..! திருப்பி அடித்த திருமா - ஆதவ் அர்ஜுனாவிற்கு என்ட் கார்ட், விஜயின் அடுத்த மூவ் என்ன?
Vijay Thiruma: விசிக துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Vijay Thiruma: புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்கக் கூடாது என யாரும் அழுத்தம் தரவில்லை என, தவெக தலைவர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
முரண்பட்டு செயல்படும் ஆதவ் அர்ஜுனா
விசிகவில் இணைந்தது முதற்கொண்டே அக்கட்சியின் நிலைப்பாட்டிற்கும், திமுகவின் கூட்டணிக்கும் முரணாக ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார். குறிப்பாக பல இடங்களில் திமுகவை நேரடியாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தான் ”எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில், தவெக தலைவர் விஜய் மற்றும் திருமாவளவனை ஒரே மேடையில் ஏற்ற முயன்றார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்றியதோடு, இருவரும் ஒரே மேடையில் ஏறுவார்களா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது. ஆனால், இறுதியில் அந்த புத்தக வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்கப்போவதில்லை என கூறி, சர்ச்சைகளுக்கு திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்தார்.
மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜுனா
இந்த சூழலில் சென்னையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திருமாவளவன் மேடையில் இல்லை, ஆனால் அவரது மனசாட்சி இங்கு தான் இருக்கிறது. பாஜகவை தமிழ்நாட்டில் ஒழித்துவிட்டோம். 2026ல் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி பிறப்பால் முதலமைச்சர் உருவாகக் கூடாது. தமிழ்நாட்டில் ஒரு பொதுத்தொகுதியில் இன்று வரை ஒரு தலித் வேட்பாளரை நிறுத்த முடியவில்லை, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஏன் சொல்லக் கூடாது?. விஜய் வேங்கை வயலுக்கு செல்ல வேண்டும். நீங்க களத்துக்கு வாங்க” என ஆதவ் அர்ஜுனா பேசினார்.
திருமாவிற்கு அழுத்தம் - விஜய்
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விஜய், “தேர்தல் நேர்மையாக, வெளிப்படையாக நடக்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தால் நியமிக்கப்பட வேண்டும். சம்பிரதாயத்திற்காக மழை தண்ணீரில் நின்று போட்டோ எடுக்கும் அரசியல்வாதி நான் அல்ல. மக்களோடு என்றும் நான் இருப்பேன். விடுதலை சிறுத்தை தலைவரான திருமாவளன், அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிலேயே கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சியின் அழுத்தம் இருந்தாலும். அவரது மனம் முழுவதும் இங்கதான் இருக்கும். திருமாவிற்கு கொடுக்கப்படும் அழுத்தத்தை என்னால் முழுமையாக உணர முடிகிறது” என பேசினார்.
அதிர்ந்த விசிக
வேறு வழியின்றி நிர்பந்ததின் பேரிலேயே விசிக, திமுக கூட்டணியில் இருப்பது போன்று ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய் பேசியதாக பார்க்கப்படுகிறது. இது விசிக கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசிய அக்கட்சி எம்.எல்.ஏ., ஆளுர் ஷாநவாஸ், ”விஜய்க்காக வேலை பார்ப்பவர் ஆகிவிட்டார் ஆதவ் அர்ஜுனா. அம்பேத்கர் புத்தக நூல் வெளியீட்டு விழாவுக்கு பின்னால் அரசியல் கணக்குகள் இருக்கின்றன. ஆதவ் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை திருமா எடுப்பார். மேலும், “கூட்டணி நிர்பந்தத்தால் திருமாவளவன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று விஜய் எந்த அடிப்படையில் கூறுகிறார்? திருமாவை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே இதை பார்க்கிறேன்” என விசிக எம்.எல்.ஏ., சிந்தனைச் செல்வன் பேசியுள்ளார்.
திருமாவளவன் சொல்வது என்ன?
இதனிடையே, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அழுத்தம் என்ற கருத்தை விஜய் பதிவு செய்திருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய அளவுக்கு நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை என்பதை பதிவு செய்கிறேன். இந்த நிகழ்வில் நான் பங்கேற்காமல் போனதற்கு, விஜய் காரணம் இல்லை. அவருக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சிக்கலும் இல்லை. விஜய் மீது எந்த வருத்தமும் இல்லை.
தமிழகத்தில் எங்களை வைத்து காய் நகர்த்துகின்ற அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள். நான் சுதந்திரமாக, விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு எந்த பாதகமும் ஏற்படாத வகையில் எடுத்த முடிவு. இதில் எந்த அழுத்தமும் இல்லை. விஜய் சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு சுதந்திரம் இருக்கிறது. அம்பேத்கர் பற்றி இன்று எல்லோரும் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆதவ் அர்ஜுனா நீக்கம்?
திமுக. தலைமையிலான கூட்டணியில் விசிக அங்கம் வகிக்கிறது. இந்தநிலையில் கூட்டணியில் குழுப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா கருத்து கூறியிருப்பது உண்மை. இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்போம் . உரிய விளக்கம் கிடைக்கும் என்று பார்ப்போம். அதன்பிறகு இயக்க முன்னணி தோழர்களோடு கலந்து பேசி முடிவெடுப்போம்" என்று திருமாவளவன் பேசியுள்ளார். இதனால் ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து நீக்கப்படுவாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜயின் அடுத்த மூவ் என்ன?
விசிகவை திமுக கூட்டணியில் இருந்து பிரிக்க வேண்டும் என்பதே விஜயின் நோக்கமா என, விசிக நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரம், அதிமுக கூட்டணியையே வேண்டாம் என கூறி வரும் எங்களது தலைவர், விசிக கூட்டணிக்கான ஏன் இவ்வளவு மெனக்கெடப்போகிறார் என தவெக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர். தனித்து நின்று ஆட்சி அமைப்பதே எங்களின் இலக்கு என ஏற்கனவே பல அறிக்கைகளில் நாங்கள் தெளிவுபடுத்தி உள்ளதாகவும் அந்த கட்சியினர் கூறுகின்றனர். இருப்பினும், வலுவான கூட்டணி அமைப்பது ஒரு பக்கம் என்றாலும், வலுவாக உள்ள ஒரு கூட்டணியை வலுவிழக்கச் செய்வதும் வெற்றிக்கு அவசியம் என்று உணர்ந்தே, திமுக - விசிக கூட்டணி குறித்து விஜய் தொடர்ந்து பேசி வருவதாகவும் அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். விஜய் கேட்கும் பல கேள்விகள் திமுக அரசிடம் விசிக எழுப்ப தவறியவை தான் எனவும், இதற்கு திருமா பதில் அளித்தாலும், அளிக்காவிட்டாலும் அது விஜய்க்கு மைலேஜாகவே அமையும் என்றும் சில மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். அதேநேரம், ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து நீக்கப்பட்டால், அவர் உடனடியாக தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.