எ.வ.வேலு தேன் கூட்டில் கை வைத்துவிட்டார்; நாங்கள் தேனீக்களாய் மாறி கொட்டுவோம் - வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி பேச்சு
ஒரு வார காலத்திற்குள் அக்னி கலசத்தை அதே இடத்தில் மீண்டும் நிறுவ வேண்டும், இல்லை என்றால் எங்களது போராட்டம் வேறு மாதிரியாக இருக்கும். இன்று காந்தியை சுட்ட தினம்; எங்க பசங்க கோட்சேவாக மாறிவிடுவார்கள்
திருவண்ணாமலை மாவட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் கடந்த 1989 ஆம் ஆண்டு வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸால் வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி கலசம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சாலை விரிவாக்கத்திற்காகவும், நிழற்குடை கட்டுவதற்காகவும் அதிகாரிகள் கூறியதற்காக தற்காலிகமாக அக்னி கலசம் அகற்றப்பட்டது. அதன் பின்னர் சாலை விரிவாக்கம் மற்றும் நிழல் குடை கட்டும் பணி முடிவடைந்த நிலையில் அந்த அக்னி கலசம் நிழற்குடை பக்கத்தில் அதிகாரிகள் ஒதுக்கித் தந்த இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது.
இந்நிலையில் புகாரை அடுத்து அந்த அக்னி கலசத்தை அகற்ற அதிகாரிகள் முயற்சி செய்யதனர். இதனால் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அக்னி கலசம் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் திடீரென்று இரவோடு இரவாக அந்த அக்னி கலசத்தை வருவாய் துறை அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இதை கண்டித்து பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவம் அறிந்த வன்னியர் சங்க தலைவர் அக்னி கலசம் நிறுவப்பட்ட இடத்தை பார்வையிடுவதற்காகவும், திருவண்ணாமலையில் வன்னியர் சங்க ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி நேற்று வருகை தந்தார். இதனால் திருவண்ணாமலையில் இருந்து நாயுடுமங்கலம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நாயுடு மங்கலத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் அக்னி கலசம் நிறுவப்பட்ட இடத்தை பார்வையிட்ட வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி பின்னர் அங்கு நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், இங்கு நிறுவப்பட்ட அக்னி கலசத்தை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேசனும், திருவண்ணாமலை கோட்டாட்சியர் வெற்றிவேலும் சேர்ந்து அகற்றியுள்ளனர். இவர்களுக்கு பின்னால் இருந்து செய்ய வைத்தவர் அமைச்சர் எ.வ.வேலு தான் காரணம் என்றும், இதன் மூலம் தேன் கூட்டில் கல்லெறிந்து உள்ளனர். இனி நாங்கள் தேனீக்களாய் கொட்டுவோம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம் என்றார்.
அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, நாயுடு மங்கலத்தில் 1989 ஆண்டு வன்னியர்கள் வாழும் இந்த இடத்தை அடையாளம் காட்டும் வகையில் இங்கு எங்களின் உயிர்நாடியாக இருக்க கூடிய அக்னி கலசத்தை டாக்டர் ராமதாஸ் நிறுவினார். ஆனால் அக்னி கலசத்தை இரவோடு இரவாக அமைச்சர் எ.வ.வேலு தூண்டுதலின் காரணமாக மாவட்ட ஆட்சியர் நேரடி உதவியாளர் மற்றும் கோட்டாச்சியர் அகற்றியது வருத்தம் அளிக்கின்றது. தமிழக அரசு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் ஒரு வார காலத்திற்குள் அக்னி கலசத்தை அதே இடத்தில் மீண்டும் நிறுவ வேண்டும். இல்லை என்றால் எங்களது போராட்டம் வேறு மாதிரியாக இருக்கும். இன்று காந்தியை சுட்ட தினம். எங்க பசங்க கோட்சேவாக மாறிவிடுவார்கள்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. பள்ளி மாணவிகள் பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். வன்னியர்களுக்கு அளித்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எங்களது விளக்கத்தை கேட்காமல் இரண்டு நீதிபதிகள் ரத்து செய்துள்ளனர். இதன் தாக்கம் தமிழகத்தில் எதிரொலிக்கும். தனிப்பட்ட ஒரு ஜாதிக்கு கொடுக்கப்பட்ட சலுகை ரத்து செய்யப்பட வில்லை. ஆனால் வன்னியர்களுக்கு கொடுத்த இட ஒதிக்கீடு மற்றும் ரத்து செய்யப்படுகிறது. நாங்கள் எல்லாம் இளிச்சவாயர்களா? திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டு நாமம் போட்டு வருபவர்கள் என நினைத்து விட்டார்களா? அல்லது திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு அரோகரா என்று சொல்லி நாமம் போடும் கும்பல் என நினைத்து விட்டார்களா? திருப்பதி ஏழுமலையானும், அரோகராவும் எங்களவர்கள் தான். அமைதியாக இருப்போம். எங்கள் விவகாரத்தில் அத்துமீறி நடந்தால் அடக்குவோம் எனக்கூறினார்.
இதற்கு முன்னதாக நாயுடு மங்கலத்தில் கூடியிருந்த பாமக தொண்டர்கள் தங்களது கைகளில் வைத்திருந்த கட்சி கொடியை வைத்து அவ்வழியாக சென்ற அரசு பேருந்தின் பின்புற கண்ணாடியை கட்டியுள்ளனர் இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்களை வேறு வழியில் காவல்துறையினர் மாற்றி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.