மேகதாது அணை விவகாரம்: உச்சநீதிமன்ற வழக்கை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசுக்கு வைகோ கோரிக்கை..!
மேகதாது அணை திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட உச்சநீதிமன்ற வழக்கை தமிழ்நாடு அரசு விரைவுபடுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்
நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற 2014-ஆம் ஆண்டிலிருந்தே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசின் அனுமதி பெறுவதற்கு கர்நாடக மாநிலம் தொடர்ச்சியாக முனைந்தது. 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் அனந்தகுமார் இல்லத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் அப்போதைய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு, மேகதாது அணை கட்டுவதற்கு வெளிப்படையாக அனுமதி அளிக்காது என்றும், கர்நாடக மாநிலம் தடுப்பு அணை கட்டிக் கொள்ளலாம் என்றும் எழுதப்படாத உடனபாடு ஏற்பட்டதை 2015 ஜனவரி 20 இல் தஞ்சையில் காவிரி பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டபோது சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்வதிலேயே குறியாக இருக்கின்ற மோடி அரசு, மேகதாது அணை கட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கையை கர்நாடக மாநில அரசு அனுப்பியதும், ஒன்றிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை 2018 நவம்பர் 25 இல் ஆய்வு அனுமதியை வழங்கியது. இதனை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொதித்தெழுந்த நிலையில்தான், 2018 டிசம்பர் 5 இல் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. கடந்த 2020 செப்டம்பர் 15 இல் கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி, மேகேதாட்டு பகுதியில் அணை கட்டப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து 2020 செப்டம்பர் 18 இல் கர்நாடக முதல்வர் எடியூரப்பா டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபின், மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதியை வழங்கிவிடும்; உடனடியாகப் பணிகளைத் தொடங்குவோம் என்ற அறிவித்தார் என தனது அறிக்கையில் கூறியுள்ள வைகோ.
இதன் தொடர்ச்சியாக 2020 நவம்பர் 18 ஆம் தேதி கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலியும், ஒன்றிய அரசின் நிலக்கரித்துறை அமைச்சரும் - கர்நாடகத்தைச் சேர்ந்தவருமான பிரகலாத் ஜோஷியும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தைச் சந்தித்தனர். அதன்பின்னர் கஜேந்திரசிங் ஷெகாவத், “கர்நாடக மாநில நீர் திடடங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்” என்று தெரிவித்தார். இந்நிலையில், மேகதாது பகுதியில் அணை கட்டுமானப் பணிகளுக்கான பொருட்களை கர்நாடக மாநில அரசு குவித்து வைத்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தானே முன்வந்து கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சிக்கு தடை விதித்து, அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஒரு குழுவையும் அமைத்தது.
ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெறாமல், மேகேதாட்டில் தடுப்பணை கட்டும் முயற்சியில் கர்நாடகம் ஈடுபட்டுள்ளது என்றும் தீர்ப்பளித்தது. மேலும் இதுகுறித்து தமிழ்நாடு அரசும், கர்நாடக அரசும் தங்களது விளக்கங்களை வரும் ஜூலை 5 ஆம் தேதி தீர்ப்பாயத்தின் அமர்விற்கு வந்து தெரிவிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழங்கிய இத்தீர்ப்பை இரத்து செய்யுமாறு டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமையகத்தில் கர்நாடக மாநில அரசு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு நீதிபதி ஏ.கே.கோயல், தமிழ்நாடு அரசின் விளக்கங்களைக் கோராமல், கர்நாடகம் வைத்த கோரிக்கையை ஏற்று, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையை இரத்து செய்து, ஜூன் 18, 2021 இல் தீர்ப்பளித்து இருக்கிறார்.
தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் அமர்வு ஜூலை 5, 2021 அன்று மேகேதாட்டு அணை தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடக மாநில அரசுகளின் கருத்துகளைத் தெரிவிக்க ஆணையிட்டிருந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் அதற்கு வாய்ப்பளிக்காமல், ஒருதலைபட்சமாக தீர்ப்பளித்தது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல என கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதன் பின்னணியில்தான் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை கட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துவிட்டதாக கூறிக்கொண்டு, காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் பணியை விரைவில் தொடங்குவோம் என்று தெரிவித்து இருக்கிறார்.
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றம் 2018 பிப்ரவரி 16 இல் அளித்த தீர்ப்பு ஆகியவற்றை கர்நாடக மாநிலம் அலட்சியப்படுத்துவதும், ஒன்றிய பா.ஜ.க. அரசு அதற்கு துணை போவதும் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படுமானால் தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வரவேண்டிய 177.25 டி.எம்.சி. நீர் வெறும் கானல் நீராகப் போய்விடும். இதற்கு ஒருபோதும் ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஜூன் 17 ஆம் தேதி சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரிடமும் நேரில் வலியுறுத்தி உள்ளார். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக விரைவுபடுத்தி, மேகதாதுவில் தடுப்பு அணை அமைக்கும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்