ஒரே கப்பலில் இறக்குமதி செய்யப்பட்ட 120 காற்றாலை இறகுகள் ! தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் சாதனை
இதற்கு முன்னதாக அதிகபட்சமாக 60 காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து சாதனை படைத்த நிலையில் தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 120 எண்ணிக்கையிலான காற்றாலை இறகுகளை ஒரே கப்பலின் மூலம் இறக்குமதி செய்து சாதனை படைத்துள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட காற்றாலை இறகுகள் அங்குள்ள சாங்ஷ(Changshu) துறைமுகத்தில் இருந்து MV.NAN FENG ZHI XING என்ற கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலில் கொண்டுவரப்பட்ட 76.8 மீட்டர் நீளம் கொண்ட 120 காற்றாலை இறகுகளும் 44 மணிநேரத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட காற்றாலை இறகுகளைக் இரண்டு பெரியநகரும் பளுதூக்கி இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பாக கையாளப்பட்டன. இக்காற்றாலை இறகுகள் நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கிவரும் காற்றாலை பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட காற்றாலை இறகுகளில் இதுதான் அதிக எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக அதிகபட்சமாக 60 காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து சாதனை படைத்த நிலையில் தற்போது 120 காற்றாலை இறகுகளை ஒரே கப்பலில் இருந்து இறக்குமதி செய்து வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நிதியாண்டில் மொத்தம் 2906 காற்றாலை இறகுகளும் (2021-2022) நடப்பு நிதியாண்டில் , குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் வரையில் மொத்தம் 1598 காற்றாலை இறகுகள் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காற்றாலை இறகுகள் மற்றும் காற்றாலை உதிரிபாகங்களை சேமித்துவைப்பதற்கு தேவையான இடவசதிகள் இருக்கின்றன. மேலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமலும் இருக்கின்றன. அதே போல எளிதான முறையில் நீண்ட காற்றாலை இறகுகளை எடுத்து செல்லும் மிகப்பெரிய லாரிகளும் இங்கு இருப்பதால் எளிதாக துறை முகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எடுத்துச்செல்வதற்கு ஏதுவாக உள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் இணைப்பு நெடுஞ்சாலைகள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சிறந்த இணைப்பினை வழங்குவதன் மூலம் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காற்றாலை இறகுகள் கையாளுவதில் ஒரு தனித்துவமான துறைமுகமாக விளங்குகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றாலை இறகுகளை சிறப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் கையாண்டு இச்சாதனை புரிவதற்கு உறுதுணையாக இருந்த கப்பல் முகவர்களான Asian Shipping Agencies, சரக்கு கையாளும் & டிரான்ஸ்போர்ட் முகவர்கள் மற்றும் ஏற்றுமதியார்கள் , துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் துறைமுக ஆணையத்தலைவர் தா.கீ. இராமச்சந்திரன் பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் பேசிய அவர் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தினால் வழங்கப்படும் சிறப்பான சேவை நம் நாட்டின் சுற்றுபுறச்சூழலின் மேன்மைக்கும் புதைக்கப்பட்ட மின்சாரம் தயாரிக்கும் செயல்திறனை அதிகரிப்பதற்கும் உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.