மாநகராட்சி, நகராட்சிக்கு டிசம்பரில் தேர்தல்... சஸ்பென்ஸ் உடைக்கும் அமைச்சர் துரை முருகன்!
ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு, வரும் டிசம்பர் மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும் எனத் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்தவுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் எனத் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். அக்டோபர் மாதம் முதல் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு, வரும் டிசம்பர் மாதம் முதல் நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றிற்கான தேர்தல் நடத்துவதற்கான பணி நடைபெற்று வருவதாக கூறியிருந்தார். அவர் 2018ஆம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலுக்கான அரசாணையையும், வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்படும் எனவும் முன்னாள் ஆட்சியாளர்கள் அறிவித்திருந்ததைச் சுட்டிக் காட்டிய அமைச்சர் கே.என்.நேரு, `தற்போதைய திமுக ஆட்சியில் புதிதாக 6 மாநகராட்சிகள், 29 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் வார்டுகள், வாக்காளர் எண்ணிக்கை முதலானவற்றில் மாற்றங்கள் ஏற்படுவதால் மறுவரையறை செய்யப்பட்டு வருகிறது. வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு, அவற்றை அறிவிக்க சுமார் 15 முதல் 20 நாள்களாகும். அவற்றை அறிவித்த பிறகு, சுமார் 100 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, அதன் பிறகு மீண்டும் அறிவிக்கும் போது 30 நாள்கள் கால அவகாசம் தேவைப்படும். இந்தப் பணிகள் அனைத்தையும் விரைவாக முடித்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று முதல்வர் உறுதியாக கூறியுள்ளார். அதிகாரிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எப்போது தேர்தல் என்பதைத் தேர்தல் ஆணையம் தான் அறிவிக்க வேண்டும். அதனால் விரைவில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கும்’ என்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது தெரிவித்திருந்தார்.
கடந்த செப்டம்பர் 20 அன்று, உச்ச நீதிமன்றம் தமிழகத் தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை நடத்துவதற்காக ஒரு நாள் கூட கால அவகாசம் வழங்க முடியாது எனத் தெரிவித்திருந்தது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்தி முடிக்குமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விசாரணையின் போது, தேர்தல் ஆணையம் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஏற்கனவே மூன்று முறை கால அவகாசம் வழங்கப்பட்ட பிறகும் தேர்தல் ஆணையம் தேர்தல் நாளைத் தொடர்ந்து தள்ளி வைப்பதைக் கண்டித்துள்ள தலைமை நீதிபதி ரமணா, விரைவில் தேர்தல் நாளை அறிவிப்பது தொடர்பான பிரமாணத்தை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் டிசம்பர் மாதம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.