டிஜிட்டல் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் நிலை... கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரிடம் திமுக மக்களவை குழு துணைத் தலைவரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி, எழுத்துப்பூர்வமாக சில கேள்விகளை பிப்ரவரி 7-ஆம் தேதி எழுப்பினார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி மாற்றுத்திறனாளிகள் சேவைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் பதிலளித்துள்ளார்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரிடம் திமுக மக்களவை குழு துணைத் தலைவரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி, எழுத்துபூர்வமாக சில கேள்விகளை பிப்ரவரி 7 ஆம் தேதி எழுப்பினார்.
“டிஜிட்டல் ஆளுகைக்கான முன் முயற்சிகள் நாட்டின் மாற்றுத் திறனாளி மக்களுக்கு குறிப்பாக பார்வை மற்றும் மூளை வளர்ச்சி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவில்லை என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமான தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் ஏதேனும் கொள்கை முடிவு உள்ளதா?
மாற்றுத் திறனாளிகளுக்கு சாதகமாக இருக்கும் வகையில் சோதிக்கப்பட்ட அரசு செயலிகள் மற்றும் இணைய தளங்களின் விவரங்கள் என்ன?
மாற்றுத் திறனாளிகளுக்கான வணிக பயன்பாடுகளை உள்ளடக்கிய செயலி வடிவமைப்பை ஊக்குவிக்க அரசாங்கம் ஏதேனும் முன்முயற்சி அல்லது கொள்கையை மேற்கொண்டிருக்கிறதா? இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?” என்று கனிமொழி கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ஏ. நாராயணசாமி அளித்துள்ள பதில் பின்வருமாறு:
“மத்திய அரசு 19.04.2017 அன்று முதல் நடைமுறைக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் உரிமை (RPWD) சட்டத்தை (2016) இயற்றியுள்ளது. இந்தச் சட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இதில் பார்வை மற்றும் பிற குறைபாடுகள் உள்ளவர்கள் உட்பட, உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையில்லாத சூழலை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 42 இன்படி ஆடியோ, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் கிடைக்கும் அனைத்து உள்ளடக்கங்களையும் பார்வை மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய வடிவத்தில் இருப்பதை உறுதி செய்ய உரிய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தின் படி பொது கட்டடங்கள், பேருந்து போக்குவரத்து, இணைய தளங்கள் ஆகியவற்றை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான நிலையில் பராமரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிகளின்படி அனைத்து அரசு இணைய தளங்களும் இணைய தளங்களுக்கான வழிகாட்டுதல்களுக்கு இணங்க இயங்க வேண்டும் என்பதை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் துறை கவனித்துக் கொள்கிறது.
மேலும் இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) தகவல், தொடர்பு தொழில் நுட்பத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் மாற்றுத் திறனாளிகளின் அணுகல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக முறையே 24.12.2021 மற்றும் 04.05.2022 என இரு முறை அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது.
மேலும், 2017-18 ஆம் ஆண்டில், உள்ளடக்க மேலாண்மை கட்டமைப்பின் கீழ், மத்திய அரசின் அமைச்சகங்கள்/துறைகளின் 95 இணையதளங்கள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MEITY) அமைக்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை (DEPWD) பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 632 இணையதளங்களையும் மாற்றுத் திறனாளிகள் அணுகக் கூடியதாக மாற்றியுள்ளது. மேலும், சுகம்யா பாரத் ஆப் என்ற க்ரவுட் சோர்சிங் மொபைல் செயலியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலி பொது மையக் கட்டமைப்பு, வசதிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும் போது எதிர்கொள்ளும் அணுகல் தொடர்பான சிக்கல்களை தீர்க்க உதவுகிறது. எவரும், எங்கும், எந்த நேரத்திலும் பயன்படுத்துவதை இந்த செயலி உறுதிப்படுத்துகிறது” என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.