''இது பொறுப்பல்ல, பணி'' - பதவியேற்ற பின் மத்திய அமைச்சர் எல். முருகன் பேச்சு
எனக்கு வழங்கப்பட்டுள்ளது பொறுப்பு அல்ல, பணி. வளர்ச்சி, கல்வியில் இன்னும் முன்னேறி முதன்மை மாநிலமாக தமிழ்நாடு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மத்திய பாரதிய ஜனதா அரசு தனது புதிய அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த எல்.முருகன் இதில் மத்திய அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் இன்று பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன், ”தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காக சேவை செய்ய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு வழங்கப்பட்டுள்ளது பொறுப்பு அல்ல, பணி. வளர்ச்சி, கல்வியில் இன்னும் முன்னேறி முதன்மை மாநிலமாக தமிழ்நாடு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
2020-ஆம் ஆண்டு, தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்ட இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர். மேலும் இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும், சென்னை உயர்நீதிமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்ந்தெடுக்க சீனியர்கள் பொன் ராதா கிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், எச். ராஜா. கே.டி ராகவன் ஆகியோர் மத்தியல் போட்டி இருந்தது. ஆனால், 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டார்.
With the blessings of God and the Honourable Prime Minister Shri.@narendramodi ji, was sworn in as a Minister of State in the Government of India, at Rashtrapati Bhavan.@JPNadda @blsanthosh #Govt4Growth#CabinetReshuffle pic.twitter.com/x3KSc2Qcec
— Dr.L.Murugan (@Murugan_TNBJP) July 7, 2021
இதற்கு முன்பு, கடந்த 2000-ம் ஆண்டு, பட்டியலினத்தைச் சேர்ந்த டாக்டர். கிருபாநிதி, தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி வகித்த நிலையில், சரியாக 20 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலினைத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு, தமிழ்நாட்டில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6ஆம் தேதிவரை, மாநில பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த யாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்படும் என்று எல். முருகன் அறிவித்தார்.
கொரோனா பரவலின்போதும், சமூக இடைவெளியின்றி கையில் வேல் ஏந்தியபடி பாஜகவினர் வேல் யாத்திரையை நடத்தி முடித்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. தமிழ்நாடு பாஜக தலைவராக எல். முருகன் பதவி வகிக்கும் காலக்கட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் போட்டியிட்ட 20 இடங்களில் 4 இடங்களை பாஜக கைப்பற்றியது. தமிழ்நாட்டில் பாஜக அதிக இடங்களை வென்றது இதுவே முதல் முறை! எனினும், முருகன் போட்டியிட்ட தாராபுரம் தொகுதியில் திமுகவின் கயல்விழியைவிட 812 வாக்குகள் பின்தங்கிய அவர், தேர்தலில் தோல்வியை தழுவினார்.
இந்த ஜூலை மாதத்தில் ஒருவாரத்துக்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டிருந்த எல்.முருகன் பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்டவர்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தார், இப்போது அவருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.