அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ நியமனம் - சபாநாயகர் அப்பாவு
அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்
சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அலுவல் சாரா உறுப்பினராக மூன்றாண்டுகளுக்கு உதயநிதி நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
#JUSTIN | அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ நியமனம்
— ABP Nadu (@abpnadu) September 13, 2021
விரிவாக வாசிக்க>> https://t.co/GByGystTCH#TNAssemblySpeech | #TNAssembly | #UdhayanidhiStalin | #DMK | #MKStalin | #annauniversity | @arivalayam pic.twitter.com/ImIO5Y19M5
அதேபோல், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஈஸ்வரன், கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக,மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு கோரும் தீர்மானத்தை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த தீர்மானத்தை தாக்கல் செய்த பிறகு இந்த மசோதாவை முன்மொழிந்து முதலமைச்சர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
நீட்:
“ நீட் எனும் தேர்வை கொண்டு வந்து மருத்துவ கல்வி கனவைச் சிதைத்து வரும் ஒன்றிய அரசுக்கு எதிராக கடந்த நான்காண்டு காலமாக தமிழ்நாட்டில் மிகக்கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விலைமதிக்க முடியாத மாணவ, மாணவியர் தங்களது இன்னுயிரை இந்த போராட்டத்திற்கு தாரைவார்த்து மறைந்து போயிருக்கிறார்கள்.
தொடக்கத்தில் இருந்தே இந்த நீட் தேர்வை தி.மு.க. எதிர்த்து வருகிறது. ஏனென்றால் மாணவர்களுக்கு கல்வித்தடையை ஏற்படுத்தக்கூடிய நுழைவுத்தேர்வுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்த அரசுதான் தி.மு.க. அரசு. இதன் தொடர்ச்சியாக நீட் தேர்வை ரத்து செய்ய, கழக அரசு அமைந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலே சட்டம் இயற்றப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறோம்.
அதை நிறைவேற்றும் வகையில் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய இளநிலை மருத்துவ கல்விச் சேர்க்கைகளை, இனி 12-ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்துவதற்கு ஏதுவாக, வலிமையான சட்டமுன்வடிவு இப்பேரவையில் நான் முன்மொழிகிறேன்.
சட்டப்போராட்டம் :
கழக அரசு பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தொடங்கியிருக்கிறோம். ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம். பொதுமக்கள் அனைனரிடம் இருந்தும் கருத்துக்களை இக்குழு கேட்டுப் பெற்றது.
86,342 நபர்களின் கருத்துக்களை ஆராய்ந்து, தனது விரிவான பரிந்துரைகளை நீதிபதி ஏ.கே.ராஜன் குழு கடந்த ஜூலை 14-ந் தேதி அரசுக்கு அளித்தது. அந்த பரிந்துரைகளில் சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துக்கல்வியை பெறும் கனவிற்கு இடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில் வளமிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து. எம்.பி.பி.எஸ். மற்றும் உயர் மருத்துவ படிப்புகளில் பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக. அரசுப்பள்ளி மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,. பட்டியலின மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், எம்.பி.பி.எஸ். மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை நீட் தேர்வு உறுதி செய்வதாக தெரியவில்லை எனவும், மாணவர்கள் மற்றும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு மட்டுமே தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு புகுத்தியுள்ளது எனவும் அறிக்கை முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
கல்வியின் தரம்:
எனவே, 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டத்தை போன்றதொரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசுத் தலைவருடைய ஒப்புதலைப் பெறலாம் என்றும் இந்த குழு பரிந்துரை செய்துள்ளது.
நீட் தேர்வானது மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்பதும் தவறானதே. 2017-ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே அதிக மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்வி நிறுவனங்களை கொண்டுள்ள மாநிலங்களுள் தமிழ்நாடு ஒன்றாக இருந்தது. இந்த நிறுவனங்களிடம் இருந்து பட்டம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவராக விளங்கினர். எனவே, மேல்நிலைப்பள்ளி பாடத்திட்டம் போதுமான தரத்தில் இருக்கும் சூழலில், தகுதித்தேர்வில் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சேர்க்கையானது எந்த வகையிலும் கல்வியின் தரத்தை குறைத்துவிடாது.
மேலும், பள்ளித் தேர்வு மதிப்பெண்கள் நெறிப்படுத்துதல் முறைமூலமாக சரி செய்யப்பட்டால் அது முறையான, நியாயமான மற்றும் நடுநிலையான சேர்க்கை முறையை வழங்கும். மருத்துவ கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையினை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் மூன்றாவது பட்டியலில் 25-வது உள்ளீட்டில் காணலாம். எனவே, மாநில அரசு அதை முறைப்படுத்த தகுதியுடையது.
சமூகநீதி:
இந்த புதிய சட்டமுன்வடிவில், மருத்துவ இளநிலைப் படிப்பில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்கள் ஆகியவற்றிற்கு 12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த முன்மொழியப்படுகிறது. மேலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையை மேற்கொள்ள இந்த சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நீட் தேர்வு விவகாரத்திலும் அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பை நல்கி, சமூகநீதியில் வரலாறு படைத்திட துணைநிற்க வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.