முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் – தொண்டர்களுக்கு வைத்த அன்பு கோரிக்கை
தனது அரசியல் வாழ்க்கையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து தொண்டர்களுக்கு அன்பு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

தனது அரசியல் வாழ்க்கையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து தொண்டர்களுக்கு அன்பு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இன்று ஜனநாயகன் படப்பிடிப்பு மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக விஜய் இன்று மதுரை செல்கிறார்.
இதற்காக விஜய் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். இதையடுத்து சென்னையில் விஜய் முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஜனநாயகன் படப்பிடிப்புக்காக நான் மதுரை செல்கிறேன். தவெக நிகழ்ச்சிக்காக அல்ல. அங்கிருந்து கொடைக்கானல் காரில் செல்கிறேன். அங்கு செல்லும்போது என் காருக்கு பின்னால் என்னை யாரும் பின் தொடர வேண்டாம். தொண்டர்கள் அவரவர் வீட்டுக்கு பத்திரமாக போய் சேருங்கள். தொண்டர்கள் பைக்குகளில் நின்று கொண்டே ஓட்டுவதை பார்க்கும்போது மனதுக்கு பதட்டமாக உள்ளது.
வேறு ஒரு நிகழ்ச்சியில் நான் மதுரையில் உங்களை சந்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் நீண்ட நாள் யோசனைக்கு பிறகு அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். புதிய மாற்றத்தை நோக்கி கால் எடுத்து வைத்திருக்கும் விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு கரம் அதிகரித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை அகற்றி கால் பதிப்போம் என உற்சாகமாக உரையாற்றி வருகிறார் விஜய். மாநிலத்தில் திமுகவையும் மத்தியில் பாஜகவையும் கடுமையாக எதிர்த்து வருகிறார் விஜய்.
தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கட்சிப் பணிகளை செய்வதோடு, நிர்வாகிகளை ஊக்குவித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் கோவையில் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க சென்றார். அப்போது விமான நிலையத்தில் இருந்து ரோடு ஷோ சென்றார். அப்போது தொண்டர்கள் விஜய் பின் தொடர்ந்து அட்ராசிட்டி செய்தனர். மரத்தின் மீது ஏறியும் வாகனத்தின் மீது ஏறியும் விஜய்க்கு கை கொடுக்க தாவிக்கொண்டு இருந்தனர்.
இதையடுத்து விஜய் தொண்டர்களுக்கு கட்டளை ஒன்றை விடுத்தார். அதில், தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன.
உங்களோட அன்ப புரிஞ்சுக்கறேன் ஃப்ரெண்ட்ஸ். அதுக்கு நான் தலைவணங்கவும் செய்யறேன். ஆனா எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும்.
என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது. நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன்” எனத் தெரிவித்திருந்தார்.




















