"நான் இருக்கேன்" புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய விஜய்
டி.பி. சத்திரம், அமைஞ்சகரை உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் தவெக தலைவர் விஜய்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட டி.பி. சத்திரம் மக்களை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து தவெக தலைவர் விஜய் நிவாரணம் வழங்கி வருகினார்.
ஃப்ரெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை காரணமாக பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய விஜய்:
இந்த நிலையில், புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மத்திய சென்னையில் டி.பி. சத்திரம், அமைஞ்சகரை உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் விஜய்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைமை அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் வரவேற்கப்பட்டு அவர்களுக்கு நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.
அவர்களுக்கு அரிசி, புது துணிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல், குழந்தைகளுடன் கலந்துரையாடி சாக்லேட் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி குழந்தைகளை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் உதவி செய்வார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஃபெஞ்சல் புயலால் நிலைகுலைந்த வட தமிழகம்:
வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது. குறிப்பாக, இந்த புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளது.
இந்த மாவட்டங்களில் பெய்த பெருமழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் முழுவதும் மழைநீரால் மூழ்கியுள்ளது. இதனால், மின்சாரம் இல்லாமல் குடிநீர் இல்லாமல் மக்கள் கடந்த 3 நாட்களாக அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த சூழலில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.