"பேரிழப்பு" நடிகர் டெல்லி கணேஷ் மறைவு.. தவெக தலைவர் விஜய் உருக்கமான பதிவு!
தமிழன் திரைப்படத்தில் விஜய்யுடன் டெல்லி கணேஷ் இணைந்து நடித்த காட்சி அனைவராலும் ரசிக்கப்பட்டது.
நடிகர் டெல்லி கணேஷின் திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பு என தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகரான டெல்லி கணேஷ் நேற்று இரவு காலமானார். கடந்த 1977ம் ஆண்டு தொடங்கிய இவரது திரைப்பயணம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 400 படங்களுக்கும் மேலாக தொடர்ந்தது. சிறந்த குணச்சித்திர நடிகராக கொண்டாடப்படுகிறார்.
விஜய்யின் உருக்கமான பதிவு:
அவரின் இறப்புக்கு அரசியல் தலைவர்கள் தொடங்கி சினிமா நட்சத்திரங்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தவெக தலைவரும் நடிகருமான விஜய் உருக்கமான பதிவின் மூலம் இரங்கல் கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977), தமிழ் திரையுலகுக்கு இவரை இயக்குனர் கே. பாலசந்தர் தான் அறிமுகம் செய்தார். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது.
விஜய்யுடன் லூட்டி அடித்த டெல்லி கணேஷ்:
ஆனால் அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற சில படங்களில் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா மற்றும் தெனாலி, அவ்வை சண்முகி போன்ற படங்கள் டெல்லி கணேஷ் நடித்த குறிப்பிடத்தக்க படங்களாகும்.
தமிழன் திரைப்படத்தில் விஜயுடன் டெல்லி கணேஷ் இணைந்து நடித்த காட்சி அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒன்று. படத்தில் மூத்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடித்திருந்தார். அவருக்கு ஜூனியராக சேரும் விஜய், படத்தில் அடிக்கும் லூட்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும்…
— TVK Vijay (@tvkvijayhq) November 10, 2024
குறிப்பாக, சிகரெட்டை நிறுத்து என டெல்லி கணேஷ் கூறுவதும் அதற்கு விஜய் மேஜையின் மேல் சிகரெட்டை நிறுத்துவது போன்ற காட்சி பயங்கர நகைச்சுவையாக இருக்கும்.