Melting Story: பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரை பல்லக்கில் தூக்கிச்சென்ற முன்னாள் மாணவர்கள்; நெகிழ்ச்சி சம்பவம்
படிப்பு சொல்லிக் கொடுத்த ஆசிரியரை பல்லாண்டுகள் கழித்து, பல்லக்கில் அமர வைத்து தெருத் தெருவாகத் தூக்கி, முன்னாள் மாணவர்கள் ஊர்வலம் சென்றிருக்கின்றனர்.
படிப்பு சொல்லிக் கொடுத்த ஆசிரியரை பல்லாண்டுகள் கழித்து, பல்லக்கில் அமர வைத்து தெருத் தெருவாகத் தூக்கி, முன்னாள் மாணவர்கள் ஊர்வலம் சென்றிருக்கின்றனர். செண்டை மேளம் முழங்க சிலம்பம் சுற்றி ஆசிரியரை கவுரவித்த நெகிழ்ச்சி சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் தூய தெரசாள் நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர் வில்சன் வெள்ளையா. 1961-ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர். நல்லாசிரியர் விருது பெற்ற இவரிடம் படித்து மருத்துவராகவும் பொறியாளர் ஆகவும் பல மாணவர்கள் உயர்ந்திருக்கின்றனர். 2000ஆம் ஆண்டில் ஆசிரியர் வில்சன் வெள்ளையா பணி ஓய்வு பெற்றுள்ளார்.
இதற்கிடையே தூய தெரசாள் நடுநிலைப் பள்ளியில் 1988- 89ஆம் ஆண்டு அவரிடம் படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆசிரியர் வில்சன் வெள்ளையாவுக்கு விழா எடுக்க முடிவு செய்தனர். குறிப்பாக பல்லக்கில் அமர வைத்து செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக அழைத்து வர ஆசைப்பட்டனர்.
இதுகுறித்து விழா எடுத்த மாணவர்களில் சிலர் தனியார் தொலைக்காட்சியிடம் கூறும்போது, ''நாங்கள் இந்த அளவுக்கு உயர வில்சன் சாரே முக்கியக் காரணம். எங்கள் பள்ளியில் படித்த பலர் மருத்துவர்களாக உள்ளனர். பொறியாளராக உள்ளனர். தாசில்தாராக, எஸ்.பி. அலுவலக உயர் அதிகாரிகளாக உள்ளனர்.
நாங்கள் இந்த உயரத்தை அடைய நல்லாசிரியர் வில்சன் வெள்ளையா பெரும் பங்கை ஆற்றியுள்ளார். தன் சொந்தப் பணத்தை மாணவர்களுக்காக பல முறை செலவழித்து இருக்கிறார். அவரை கவுரவிக்க நாங்கள் அனைவரும் விரும்பினோம். மாதா, பிதா, குரு என்ற வரிசையில் தெய்வமும் அவர்தான்.
எங்கள் ஆசிரியரை பல்லக்கில் அமர வைத்து, தெருத் தெருவாகத் தூக்கி, ஒவ்வொரு இடமாக ஊர்வலம் சென்றோம். பார்த்தவர்கள் கை கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்கினர். மக்கள் அனைவரும் கைத்தட்டல்களால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்'' என்று தெரிவித்தனர்.
இதைக் கண்டு ஆசிரியர் வில்சன் வெள்ளையாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பி வழிந்தன. வயோதிகத்தாலும் தாங்க முடியாத அன்பாலும் குரல் நடுங்கப் பேசுகிறார் வில்சன் வெள்ளையா. அவர் கூறும்போது, ''இத்தகைய மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த நான் உண்மையிலேயே பேறு பெற்றவன். ஏனெனில் மாணவர்கள் எந்த நிலையிலும் என்னை மறக்கவில்லை. அவர்கள் என் மீது கொண்ட அக்கறையாலும் அன்பாலும்தான் இந்த விழாவை முன்னெடுத்து இருக்கின்றனர்.
மாணவர்கள், பெற்றோர்கள், பெரியோர்கள் மற்றும் பிற பொதுமக்கள் ஆகிய அனைவரின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமாகி உள்ளது. என்னிடம் படித்த மாணவர்களே ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்'' என்று ஆசிரியர் வில்சன் வெள்ளையா தெரிவித்தார்.
பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களே சிலருக்கு பாரமாக மாறும் இந்தக் காலத்தில், 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ஆசிரியர் ஒருவருக்காக முன்னாள் மாணவர்கள் விழா எடுத்துள்ளது பேசு பொருளாக மாறி உள்ளது.