ஆளுநரின் செயல்பாடு ஏற்புடையதல்ல.. பதவிக்கும் அழகல்ல.! திடீரென சீறிய டிடிவி தினகரன்
TTV Dhinakaran criticized governor : நீண்ட நெடிய பாரம்பரியமிக்க சட்டமன்றத்தின் மரபுகளை மாற்றக் கோருவது ஆளுநர் அவர்களுக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல, ஆளுநர் செயல்பாடு ஏற்புடையதல்ல என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையுடன் இன்றைய கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லையெனக்கூறி வெளிநடப்பு செய்தார். இந்த சம்பவம் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் செயல்பாடு ஏற்புடையதல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் செயல் திட்டங்களும், அதனால் மக்களுக்குக் கிடைக்கும் பயன்களும் நிறைந்திருக்க வேண்டிய ஆளுநர் அவர்களின் உரை, தமிழகத்தில் பாலாறும், தேனாறும் பெருக்கெடுத்து ஓடுவதாக திமுகவினர் நாள்தோறும் காணும் கனவைத் தூக்கிச் சுமந்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக கூறியுள்ளார்.
ஆளுநர் உரையில் ஏமாற்றம்
கொலை, கொள்ளை,பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம் கூலிப்படைகளின் அட்டூழியம் என தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழல் நிலவிவரும் நிலையில், அதுகுறித்து எந்த விவரங்களும் ஆளுநர் உரையில் இடம்பெறாமல் தவிர்க்கப்பட்டிருப்பது முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாகும் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, கட்டணங்களும் வரிகளும் பன்மடங்கு அதிகரிப்பு வேலையில்லாத் திண்டாட்டம் என அதற்கான வழிவகைகளை ஏற்பாடு செய்யவோ எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் திமுக அரசின் பெருமைகளை மட்டுமே உள்ளடக்கிய ஊடகங்களிலும், நாளிதழ்களில் வெளிவரும் விளம்பரமாக ஆளுநர் உரை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
தமிழகத்தில் பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதோடு, தொழில் தொடங்குவதாக ஒப்புக்கொண்ட பன்னாட்டு நிறுவனங்களும் அண்டை மாநிலத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டிருப்பதாகவும் அதன் மூலம் 36 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகியிருப்பதாகவும் கூறியிருப்பது "சீனிச் சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா" என்ற வரிகளைத்தான் நினைவுபடுத்துவதாக கூறியுள்ளார்.
ஆளுநர் பதவிக்கு அழகல்ல
நூற்றாண்டு கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றத்தில் ஆளுநர் உரை எனும் பெயரில் உண்மைக்கு புறம்பான, துளியளவும் ஆதாரமற்ற தகவல்களை அறிக்கையாகத் தயாரித்திருக்கும் திமுக அரசு, அதனை வாசிக்குமாறு ஆளுநரை நிர்பந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அதே நேரத்தில், நீண்ட நெடிய பாரம்பரியமிக்க சட்டமன்றத்தின் மரபுகளை மாற்றக் கோருவது ஆளுநர் அவர்களுக்கும் அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்வதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.




















