தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய திருநங்கை சிவன்யா; பணி நியமனம் வழங்கிய முதல்வர்..!
திருவண்ணாமலை விவசாய குடும்பத்தை சேர்ந்த சிவன்யா என்ற திருநங்கைக்கு பணி நியமனம் வழங்கினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் நடைப்பெற்ற சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுதினார். இதில் தேர்ச்சி பெற்றார் சிவன்யா அதனைத் தொடர்ந்து காவல்துறையில் துணை ஆய்வாளராக முதல் திருநங்கை சுபஸ்ரீயை தொடர்ந்து மற்றொரு திருநங்கை, காவல்துறையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். சிவன்யா என்னும் திருநங்கைக்கு காவல் பணிக்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அவருடன் டி. ஜி. பி சைலேந்திர பாபு உடன் இருந்தார். தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி வெற்றி கண்டுள்ளார் பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவன்யா.
திருநர் சமூகத்துக்கு சமூகம் வேறு பல பெயர்களை அளித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவை எதுவும் அவர்களை உயர்வாகக் கூறும் சொற்களல்ல. எந்த வாய்ப்புகளையும் வழங்காமல் திருநர்களை தவறான அவலப் பாதைக்கு தள்ளிவிட்டு, அவர்கள் மீதே குற்றம் சொல்லி பழக்கப்பட்ட பலருக்கும் மத்தியில்தான் போராடி வெற்றி கண்டுள்ளார் சிவன்யா.
திருவண்ணாமலை மாவட்டம் பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்த செல்வவேல் வயது (55) விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி வளர்மதி வயது (50) இவர்களுடைய இரண்டாவது மகளான சிவன்யா வயது (29) இவர் தற்போது சீருடைப் பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று தமிழக முதல்வரின் கையால் இன்று பணி நியமனம் பெற்றார். பெற்றோர் ஆதரவோடு படித்துவந்த சிவன்யா இடையில் தந்தை இறந்து பொருளாதார சிக்கல் போன்றவற்றில் தடுமாற்றங்களை சந்தித்திருக்கிறார். காவல்துறையில் சேர விரும்பிய சிவன்யா , அதற்கான தேர்வையும் எழுதினார். கஷ்டப்பட்டு தேர்வு எழுதியதால் அவர் நினைத்தப்படி வெற்றியும் கிடைத்தது. தற்போது காவல் பணிக்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் இருந்து பெற்றுள்ளார்.
இந்த வெற்றிக்கு பின் தன்னை என்னுடைய உறவினர்கள் மற்றும் மற்றவர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் சிவன்யா நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். காவல்நிலையத்தில் துணை ஆய்வாளராக சேரவுள்ள, சிவன்யா பயிற்சிக்குப்பின் மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறார். பிரித்திகா யாசினி , சுபஸ்ரீ மற்றும் சிவன்யா ஆகியோரின் வெற்றி சாதிக்க துடிக்கும் திருநங்கைகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.