(Source: ECI/ABP News/ABP Majha)
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்வை அடுத்து, ஒரே நேரத்தில் மக்கள் வீடு திரும்ப ஆரம்பித்த நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், போக்குவரத்து சீராகி வருவதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்திய விமானப் படையின் 92ஆவது ஆண்டு விழாவை ஒட்டி, கண்கவர் விமான சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நிகழ்வுகள் வண்ணகரமாக நடைபெற்றன. நிகழ்ச்சி முடிந்த பிறகு எல்லா மக்களும் ஒரே நேரத்தில் வெளியே வரத் தொடங்கினர். கடற்கரையில் இருந்து காமராஜர் சாலைக்கு வர வெவ்வேறு வழிகள் இருந்ததால், அனைத்து வழிகளிலும் மக்கள் கூட்டம் சாரை சாரையாகப் படையடுத்தது. இதனால் ஏற்கெனவே வந்த கூட்டத்துடன் புதிதாக வந்தவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்தது. திரும்பச் செல்லும்போது போலீஸார் யாரும் போக்குவரத்தை ஒருங்கிணைக்காததால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் தள்ளுமுள்ளாக மாறியது.
வெயிலும் போக்குவரத்தும்
நண்பகலில் வெயிலும் கொளுத்தியதால், வியர்வை வழிந்து ஆறாகப் பெருகி ஓடியது. வயதானவர்களும் குழந்தைகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். தண்ணீர் அந்த நேரத்தில் எங்கும் விற்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சிலர் மயங்கி விழுந்தனர்.
13 பேருக்கு மயக்கம்
மயக்கம் ஏற்பட்டு 13 பேர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் 4 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். அதேபோல ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேரில் 4 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.
கடும் போக்குவரத்து நெரிசல்
காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், சேப்பாக்கம், விவேகானந்தர் சாலை, வாலஜா சாலை, அண்ணா சாலை, கலங்கரை விளக்கம், சாந்தோம், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட மெரினா கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உழைப்பாளர் சிலை அருகே தற்போது போக்குவரத்து சீராக இயங்குகிறது.#chennaitraffic pic.twitter.com/EqzaIY03zC
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) October 6, 2024
இந்த நிலையில் போக்குவரத்து உழைப்பாளர் சிலை, நேப்பியர் பாலம் ஆகிய இடங்களில் சீராகி உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.