போக்குவரத்தை சரி செய்ய முயன்ற போது சாலை விபத்தில் 2 போலீசார் பலி: முதலமைச்சர் இரங்கல்
திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு சென்றுவிட்டு தஞ்சாவூர் அருகேயுள்ள இளம் பிள்ளையை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த சுற்றுலா வாகனம் ஒன்று தேவராஜ், சந்திரசேகர் மீது பயங்கரமாக மோதியது.
நாமக்கல் அருகே விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசார் வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.கே.சமுத்திரம் அருகே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் ஆங்காங்கே மணல் மூட்டைகள், டிரம்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த வழியாக திருநெல்வேலியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் ஒன்று மாற்றுப்பாதை அறிவிப்பை கவனிக்காமல் சென்று தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில், மேற்கொண்டு வாகனத்தை இயக்க முடியாததால் மீட்பு வாகனத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனிடையே சுமார் 2 மணியளவில் இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் காவல் நிலைய போலீசார் தேவராஜ் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஒருவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் விபத்து நடந்த இடம் புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காரணத்தினால் புதுச்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரும் அங்கு சென்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த காவலர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆழ்ந்த இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். pic.twitter.com/9ifOczNGj9
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 12, 2022
விபத்துக்குள்ளான காரில் பயணித்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அங்கு அதிவேகமாக ஒரு லாரி வந்துள்ளது. அதனை மடக்கிய போலீசார் டிரைவரிடம் விசாரித்தனர். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் லாரியை பிரண்ட்ஸ் ஆஃப் போலீசாரை கொண்டு பக்கவாட்டில் நிறுத்த தேவராஜ், சந்திரசேகர் இருவரும் கூறி போக்குவரத்தை சரி செய்துக் கொண்டிருந்தனர். அப்போது திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு சென்றுவிட்டு தஞ்சாவூர் அருகேயுள்ள இளம் பிள்ளையை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த சுற்றுலா வாகனம் ஒன்று தேவராஜ், சந்திரசேகர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் போலீசார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த போலீசார் தேவராஜ், சந்திரசேகர் இருவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இருவரின் குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் நிதி, கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்