கலக்கமடையும் இல்லத்தரசிகள்..! உச்சத்தை நோக்கி செல்லும் தக்காளி விலையேற்றம்..! காரணம் இது தான்.!
தற்போது தக்காளியின் விலையேற்றம் என்பது உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் இல்லத்தரசிகள்.
கலக்கமடையும் இல்லத்தரசிகள்:
பல்வேறு வீடுகளில் சமையல்களில் முக்கிய இடம் பிடிப்பது தக்காளி, வெங்காயம் தான். இவை இரண்டும் இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இதனுடன் ஒன்றி போயுள்ளனர் இல்லத்தரசிகள். இந்த நிலையில் இவைகளின் விலையேற்றம் என்பது அவ்வப்போது இல்லத்தரசிகளை கலக்கமடையச் செய்து வருகிறது. கடந்த ஆண்டு வெங்காயத்தின் விலையேற்றம் உச்சத்திற்கு சென்ற நிலையில் வெங்காயம் பதுக்கல், கடைகளில் வெங்காயம் பயன்படுத்தும் ஆம்லேட், வெங்காய வடை போன்றவற்றின் விலையேற்றமும் அதிகரித்தது. அதோடு வெங்காயத்திற்கு மாற்றாக பெரும்பான்மையான உணவகங்களில் முட்டைக்கோஸை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவ்வாறாக காய்கறிகளில் விலையேற்றம் என்பது நாளுக்கு நாள் சாதாரண மற்றும் நடுத்தர மக்களை அவ்வப்போது கலங்கடித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தக்காளியின் விலையேற்றம் என்பது உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் இல்லத்தரசிகள்.
தக்காளி விலையேற்றம்:
குறிப்பாக கடந்த ஜீன் மாதம் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ஒன்றிற்கு 80 வரை விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் 100 ஐ தாண்டி விற்பனையானது செய்யப்பட்டது. இதனால் கலக்கத்தில் இருந்த இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலாக விலை குறைந்து கிலோ 30 ரூ-40 ரூ வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று வரை விலை குறைவாக இருந்த தக்காளி விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் தக்காளியின் விலை 30 முதல் 40 ரூ வரை உயர்ந்துள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ 60 ரூ முதல் 80 ரூ வரை விற்பனையானது. அதே போல வெளிமார்க்கெட் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விலையை போலவே பச்சை மிளகாய், குண்டு மிளகாய், குடை மிளகாய், பஜ்ஜி மிளகாய் என மிளகாய் விலையும் உச்சத்தை நோக்கி சென்று வருகிறது. அதே போல அவரைக்காய், பாகற்காய் விலையும் உயர்ந்துள்ளது. மிளகாய் கிலோ 80 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மழையால் குறைந்த வரத்து:
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டிருப்பதால் அதன் வரத்து வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் வியாபரிகள். இதே போல வெளி மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் தற்போது வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலையேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மழை இருக்கும் பட்சத்தில் மேலும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலையேற்றம் கண்டு உச்சத்தை தொட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் அவர்கள். இதனால் இல்லத்தரசிகள் மற்றும் சிறு தொழில் உணவக வியாபாரிகள் என பலரும் கலக்கமடைந்துள்ளனர்.