Toll Gate Fees: அடுத்த இடி! - நாளை மறுநாள் முதல் தமிழ்நாட்டில் 28 சுங்கச் சாவடிகளில் எகிறப்போகும் சுங்கக் கட்டணம்!
தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், இதற்கு எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், இதற்கு எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 55 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் உள்ள 27 சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 28 சுங்கச் சாவடிகளில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது உணவு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். அதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாவர்.
சுங்கச் சாவடிகள் செயல்படுவது எப்படி?
பொதுவாக நாடு முழுவதும் குறிப்பிட்ட நகரங்களுக்கு, சாலை உள்ளிட்ட வசதிகளை தனியார் நிறுவனங்கள் அமைக்கும். அந்த செலவை ஈடுகட்ட சாலையில் சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கும். எனினும் செலவுகளை சுங்கக் கட்டணம் மூலம் ஈடுகட்டிய பிறகு, சுங்கச் சாவடிகளை மூட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆனாலும் சுங்கச் சாவடிகளை நடத்தி வரும் தனியார் நிறுவனங்கள் செலவை ஈடுகட்டிய பிறகும், தொடர்ந்து சுங்கக் கட்டணத்தை வசூல் செய்து வருகின்றன. இதற்குப் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கூடுதல் சுங்கக் கட்டணம்
இந்த நிலையில், சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த ஐந்தாண்டுகளில் அந்த சுங்கச்சாவடியில் 2019 ஆகஸ்ட் முதல் 2020 ஜூன் வரை பயணித்த 1.17 கோடி வாகனங்களில் 53% அதாவது 62.37 லட்சம் வாகனங்கள் மிக முக்கியமானவர்களின் வாகனங்கள் என்று அறியப்பட்டு அவற்றுக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி கூறும்போது, ’’சுங்கச் சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை. தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது எந்த வகையிலும் நியாயமற்றது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், சுங்கக்கட்டணத்தை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.
அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இதுவரை ஈட்டப்பட்டுள்ள வருவாய் குறித்து தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் தெரியவரும் முடிவுகளின் அடிப்படையில் தான் எந்தெந்த சுங்கச்சாவடிகளை தொடர வேண்டும். எவற்றை மூட வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். அத்தகைய தணிக்கை செய்து முடிக்கப்படும் வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.