TNSTC Bus: இதை செய்தால் போதும்..! தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக பயணிக்கலாம் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
TNSTC Bus: பேருந்து பயணிகளுக்கு முன்பு எப்போதும் இல்லாத இலவச பயண சலுகையை தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

TNSTC Bus: ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை ஊக்கப்படுத்தும் விதமாக இலவச பயண சலுகையை தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கோடைகால சலுகை:
வாட்டி வதைக்கும் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், நகர வாழ்க்கையில் இருந்து சற்றே ஓய்வெடுக்கவும் பொதுமக்கள் ஏராளமானோர் ஏப்ரல் - மே மாதங்களில் சொந்த ஊர்களுக்கு புறப்படுவது வழக்கம். குழந்தைகளுக்கு கல்வி நிலையங்களும் விடுமுறை அளிக்கப்படுவதால் பலர் குடும்பத்துடன் வெளியூர் பயணங்களையும் மேற்கொள்வர். இதனால் பேருந்து போக்குவரத்து பயன்பாடு என்பது இந்த காலகட்டங்களில் கணிசமாக அதிகரிக்கிறது. இதனால் டிக்கெட் கவுண்டர்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தான், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் சேவையை வழங்கி வருகிறது. ஆனால், அது இன்னும் பெரும்பாலான மக்களை முழுமையாக சென்றடையவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை ஊக்கப்படுத்தும் விதமாக இலவச பயண சலுகையை தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இலவச பயண சலுகை அறிவிப்பு:
கோடை விடுமுறையின் போது பயணிகளிடையே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பயணிகளுக்கு இலவச பயண சலுகைகளை அறிவித்துள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் முன்பதிவு முறை மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ஏப்ரல் 1 முதல் ஜூன் 15 வரை பயணம் செய்யும் பயணிகள் அதிர்ஷ்டக் குலுக்கலுக்குத் தகுதி பெறுவார்கள். இந்த போட்டியின் 75 வெற்றியாளர்கள் தானியங்கி கணினி அடிப்படையிலான அமைப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பயணிகளுக்கான பரிசுகள் என்ன?
வெற்றியாளர்களுக்கு தமிழகம் முழுவதும் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு பரிசாக வழங்கப்படுகிறது. அதன்படி முதல் பரிசு வெல்லும் 25 பயணிகள் ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 20 முறை இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு வெல்லும் தலா 25 பயணிகளுக்கு, முறையே 10 மற்றும் ஐந்து இலவச பயணங்கள் மேற்கொள்ள சலுகை வழங்கப்படும். இது தமிழ்நாட்டிற்குள் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் வரை நீளும், தமிழக போக்குவரத்துக் கழக சேவைக்கும் பொருந்தும் என கூறப்படுகிறது.
ஆண்டு முழுவதும் ஆன்லைன் முன்பதிவுகளை மேலும் ஊக்குவிக்க, ஜனவரி 2024 முதல் ஒவ்வொரு மாதமும் ஒரு தனி அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில், 13 வெற்றியாளர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். முதல் மூன்று இடங்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசும், மற்ற 10 பேருக்கு தலா ரூ.2,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
திட்டத்தின் நோக்கம் என்ன?
பேருந்துகளில் நீண்ட தூரப் பயணத்தை மிகவும் வசதியாக மாற்றுவதற்காக, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையை (OTRS) அறிமுகப்படுத்தியது. பயணிகள் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது மொபைல் செயலி மூலம் 90 நாட்களுக்கு முன்பே தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். தற்போது, இந்த முறையைப் பயன்படுத்தி தினமும் சுமார் 20,000 இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. கடைசி நேர பயணச் சிரமங்களைத் தவிர்க்க, பயணிகள் ஆன்லைன் முன்பதிவு முறையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநில அரசு வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்:
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் 20,000 க்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம், தினசரி ஒரு கோடியே 70 லட்சம் பயணிகளைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களுக்குள்ளும் இந்த சேவை நீள்கிறது. இதில், ஏசி ஸ்லீப்பர் பேருந்து, நான் - ஏசி ஸ்லீப்பர் பேருந்து, ஏசி ஸ்லீப்பர் சீட்டர் பேருந்து, ஏர் - கண்டிஷன் பேருந்து, டீலக்ஸ் பேருந்து, உல்ட்ரா டீலக்ஸ் பேருந்து, கழிவறையுடன் கூடிய அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து போன்ற சேவைகளை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் 321 டிப்போக்கள் மற்றும் ஐந்து பட்டறைகளைக் கொண்டு, தமிழ்நாட்டை கடந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்கிறது. TNSTC ஒப்பந்த மற்றும் சுற்றுலா சேவைகளையும் வழங்குகிறது. எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலவச பயண சலுகைகளை பெற, ஆன்லைன் மூலம் டிக்கெட்டை முன்பதிவுய் செய்து பயனடைய பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.





















