TN Weather: கொதிக்கும் வானிலை.. நெருப்பில் வெந்த ஈரோடு.. வெளியில் தலை காட்ட முடியாத வெயில் - எங்கெல்லாம்?
தமிழ்நாட்டில் நேற்று ஈரோட்டில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை விளாசியதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோடை வெயில் அதிகமாக இருக்கும் மாதம் மே மாதம் ஆகும். தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சில மாவட்டங்களில் மக்களின் சூட்டைத் தணிக்கும் வகையில் வெயில் மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.
ஈரோட்டை சுட்டெரித்த வெயில்:
அந்த வகையில், தமிழ்நாட்டிலே நேற்று ஈரோடு மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்துள்ளது. ஈரோட்டில் மட்டும் அதிகபட்சமாக நேற்று 41.2 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்தது. ஈரோட்டில் வழக்கமாக 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே வழக்கமாக காணப்படும். ஆனால், நேற்று வழக்கத்தை விட 2.8 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்பட்டது.
எங்கெல்லாம் 40 டிகிரி செல்சியஸ்?
ஈரோடு மட்டுமின்றி கரூர் பரமத்தியிலும் வெயில் சுட்டெரித்தது. அங்கு வழக்கமான வெப்பநிலையை காட்டிலும் 3.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. அதேபோல, மதுரையையும் வெயில் விட்டுவைக்கவில்லை. மதுரையில் வழக்கமான வெப்பநிலையை காட்டிலும் 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்து 40 டிகிரியாக வெப்பநிலை காணப்பட்டது.
பரங்கிப்பேட்டையில் 40 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.5 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 40.1 டிகிரி செல்சியஸ், வேலூரில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை விளாசியது. தமிழ்நாட்டிலே நேற்று குறைவாக வெப்பநிலை காணப்பட்டது ஊட்டியிலே ஆகும். அங்கு 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 14, 2025
கோடை வாசஸ்தலங்களில் எப்படி?
வால்பாறையில் 26.5 டிகிரி செல்சியசும், கொடைக்கானலில் 21.2 டிகிரி செல்சியசும், குன்னூரில் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்பட்டது. இந்த இடங்கள் அனைத்தும் மலைப்பகுதிகள் என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வந்தாலும் பல இடங்களில் இன்றும் வெயில் வாட்டி வதைக்கும் என்றே கூறலாம்.
சென்னை
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரையில் நேற்று வழக்கத்தை விட வெப்பநிலை குறைந்து காணப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று 36.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், சென்னை மீனம்பாக்கத்தில் 37.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் காணப்பட்டது. வழக்கமாக நுங்கம்பாக்கத்தில் 37.4 டிகிரி வெப்பநிலை காணப்படும். இது நேற்று 1.3 டிகிரி செல்சியஸ் குறைந்து காணப்பட்டது. மீனம்பாக்கத்தில் வழக்கமாக 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படும். இது வழக்கத்தை விட 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவு ஆகும்.





















