TN Weather: 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழை.. ரெடியா இருங்க மக்களே - எந்தெந்த ஊரில்?
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த சூழலில் மோந்தா புயல் வங்கக்கடலில் உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது, சென்னைக்கு 950 கி.மீட்டர் தொலைவில் இந்த புயல் சின்னம் உள்ளது.
12 மாவட்டங்களில் மழை:
வடகிழக்கு பருவமழை தீவிரம், மோந்தா புயல் காரணமாக தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மோந்தா புயல்:
தற்போது சென்னைக்கு 890 கி.மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது நாளை மறுநாள் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது.
வரும் 27ம் தேதி மோந்தா புயல் உருவாக உள்ள நிலையில், இது தமிழ்நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவையே அதிகம் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், சென்னை உள்பட வட தமிழகத்தில் மழை பரவலாக பெய்யும் என்று கருதப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போ தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே வழக்கத்தை விட அதிகளவு மழைப்பொழிவு நடப்பாண்டில் உள்ளது.
முன்னெச்சரிக்கை:
நவம்பர், டிசம்பர் மாதங்களே இன்னும் தொடங்காத நிலையில் அக்டோபர் மாத மழைக்கே சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதற்காக மாநகராட்சி 2 ஆயிரம் மோட்டார் பம்புகள், 215 நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
சென்னை மட்டுமின்றி கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏரிகள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.






















