Urban Local Body Election: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தெரிந்ததும்.. தெரியாததும்..
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து சில சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 19 ஆம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, பாமக, மக்கள் நீதி மய்யம், அமமுக என பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 டவுன் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் களைகட்டவுள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து சில சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
10 ஆண்டுகளாக தேர்தல் நடக்காதது ஏன்?
2011ல் அதிமுக பெரும்பாலான ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிகளைக் கைப்பற்றியது. 2016ல் அந்த அமைப்புகளின் காலம் முடிந்துவிட்டாலும் கூட பல்வேறு சட்டப் பிரச்சனைகள் காரணாமாக தேர்தல் நடைபெறவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பழங்குடிகள் பிரதிநிதித்துவம், அவசர கதியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் எனப் பல கட்சிகளும் பல காரணங்களை முன்வைத்து வழக்குகளைத் தொடர்ந்திருந்தன. இதைக் காரணம் காட்டியே அப்போதைய ஆளுங்கட்சியும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவந்தது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் 2021 அக்டோபரில் தேர்தல் நடந்தது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 28ல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. அதன்படி இப்போது தேர்தல் நடக்கவுள்ளது.
கட்சிகள் நிலை என்ன?
திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடந்த அக்டோபரில் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமோஅ வெற்றி பெற்றது. அதன் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றி பெறுவோம் என திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் 2019 முதல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்த அதிமுக, இந்த முறை அவர்களுடனான கூட்டணியை முறித்துள்ளது. இது எப்படி ஒர்க் அவுட் ஆகும் என்பதைப் பார்க்க வேண்டும்.
பாஜக தலைவர் அண்ணாமலையோ, ஒவ்வொரு வீட்டிற்கும் பாஜகவை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. அதற்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டுவைத்த பாமக இப்போது தனித்துப் போட்டியிடுகிறது. தேமுதிக, அமமுகவும் தனித்தே போட்டியிடுகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும், சீமானின் நாம் தமிழரும் அவ்வழியில் தான் செல்கின்றன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; முக்கிய தேதிகள்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 4-ம் தேதி முடிவடைந்தது. ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம். பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மார்ச் 2ல் பதவியேற்றுக் கொள்வார்கள்.
மார்ச் 4-இல் மறைமுகத் தேர்தல்:
மேயர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும்
பாதுகாப்புப் பணியில் 80,000 பேர்:
பாதுகாப்புப் பணியில் 80,000 போலீஸார் இடம்பெறவுள்ளனர். 1.3 லட்சம் பேர் பூத்துக்கு 4 பேர் எனப் பணியில் இருப்பர். 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.