BJP-Aiadmk Alliance: தேசிய அளவில் கூட்டணியில் இருக்கிறோம்; ஆனால் தனித்து போட்டி: அண்ணாமலை அதிரடி அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.
அதிமுக-பாஜக இடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக கடந்த ஞாயிற்றுகிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறினார். எனினும் இரு கட்சிகள் இடையே இடங்கள் பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுகவுடன் நடைபெற்றது. ஆனால் அதிமுக பெரிய கட்சி என்பதால் எங்களுடைய கோரிக்கையை அவர்களால் முழுவதுமாக நிறைவு செய்ய முடியவில்லை. ஆகவே இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம். ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தனியாக போட்டியிடுகிறோம். பாஜகவின் கட்சி வளர்ச்சிக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. தேசிய அளவில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும்.
#BREAKING | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டி என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து நீடிக்கும்
— ABP Nadu (@abpnadu) January 31, 2022
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலைhttps://t.co/wupaoCzH82 | #LocalBodyElections #AIADMK #BJP #Annamalai @annamalai_k @EPSTamilNadu pic.twitter.com/Drl7pZUcxC
தாமரை மலர வேண்டும். தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். அதிமுகவுடனான நல்லுறவு தொடரும். தனித்து போட்டியிடுவது கடினமான முடிவு இல்லை. இது கட்சியின் வளர்ச்சிக்கு உதவும்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10 சதவீத இடங்களை ஒதுக்குவதாக அதிமுக முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தெரிவித்தது. ஆனால் அதைவிட அதிக இடங்களில் போட்டியிட பாஜக விரும்புகிறது.” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று அதிமுக தன்னுடைய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன்படி கடலூர், தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வேட்பாளரை பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதில் கடலூர் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அத்துடன் கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் மற்றும் தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கான நகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக மாவட்ட செயலாளர் வெளியிட்டார். இதன்மூலம் அதிமுக 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தச் சூழலில் தற்போது பாஜக தனித்து போட்டியிட உள்ளது என்று கூறியுள்ளது.
மேலும் படிக்க: உங்க ஆபீஸுக்கு வந்தா வெளியே போக சொல்வீங்களா? - திமுகவினரிடம் கொதித்த ஜோதிமணி எம்.பி