TN Bus Strike: “போராடுவது உங்கள் உரிமை.. மக்களுக்கு இடைஞ்சல் வேண்டாம்” - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்
தொழிற்சங்கங்கள் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு பாதிப்பு இல்லா வண்ணம் பேருந்துகள் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறையின் தொழிற்சங்கங்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் வழக்கம்போல அரசு பேருந்துகள் சேவை இருக்குமா என மக்கள் கேள்வி எழுப்பினர்.
அமைச்சர் சிவசங்கர் ஊடகத்தினரிடம் பேசுகையில், ‘தொழிற்சங்கங்கள் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு பாதிப்பு இல்லா வண்ணம் பேருந்துகள் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கப்படும். மக்கள் அச்சமின்றி பேருந்துகளில் பயணிக்கலாம். போராட்டம் என்பது அவரவர்களின் உரிமையாகும். அதனை செய்து கொண்டிரு இருக்கிறார்கள். காலை முதல் நான் அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். எந்த வழித்தடத்தில் பேருந்து இயங்கவில்லை என்பதை தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, ‘பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் அனைத்து பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பேருந்துகள் குறித்த நேரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுக்கிறேன். நீங்கள் வைத்துள்ள கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள் நடைமுறையில் இருக்கிறது.
பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொண்டு புதிதாக ஓட்டுநர், நடத்துனர்களை நியமிக்கும் ஆணை வழங்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் எழுத்து தேர்வு முடிவடைந்து நேர்காணல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கருணை அடிப்படையிலான பணி வழங்குவதும் தொடங்கப்பட்டு விட்டது. இப்படி நிறைவேறிய கோரிக்கைகளை சொல்வது அரசியலுக்காக தான் என நான் நினைக்கிறேன். இன்னும் 2 கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின் போது உறுதியளித்துள்ளோம். நாங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நேரம் தான் கேட்கிறோம். அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என தொழிற்சங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்
இது பொங்கல் நேரம் என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க வேண்டும். சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய சூழல் உள்ளது. இந்த நேரத்தில் போராட்டம் என்பது பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரக்கூடியது. தொழிலாளர்களுக்கு என்றும் திமுக உறுதுணையாக இருக்கும். போராடுவது உங்கள் உரிமை என்றாலும் பொதுமக்களுக்கு இடைஞ்சல் தர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்’ என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.