பாடம் எடுத்த பாட்டி...90 வயதில் ஊராட்சி தலைவரானார்: எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டிபாசிட் இழப்பு!
TN Rural Local Body Election Results 2021: 90 வயது பாட்டி ஒருவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களின் டெபாசிட்டை காலி செய்து 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும், அதேபோல் மீதமுள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சில் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சில்களில் பெரும்பான்மை இடங்களை ஆளும் திமுக கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள் ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.
இதில் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் 22581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இருகட்ட தேர்தலில் பதிவான 77.9 சதவிகித வாக்குகள் எண்ணும் பணி 74 மையங் களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்களும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்களில் 119 பதவியிடங்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் போட்டியின்றி நிரப்பப்பட்டன.
பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் 90 வயது நிரம்பிய மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். பாட்டி பெருமாத்தாளுக்கு அந்த ஊர் மக்கள் அமோக ஆதரவு அழித்திருந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் பெருமாத்தாள் 1,558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா ஆகியோரை டெபாசிட் இழக்க செய்து பெற்ற வெற்றியை கொண்டாடி வருகின்றனர் ஊர் மக்கள். வெற்றி பெற்ற பெருமாத்தாள் தனது சுருக்கம் விழும் கன்னக்குழி சிரிப்புடன் வெற்றிச் சான்றிதழைப் பெற்றுச் சென்றார். அவருக்கு கூடியிருந்த அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். 9 மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 990 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 190 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 128 இடங்களில் இதர கட்சிகள் வென்றுள்ளன.