TN Rain Alert: தமிழகத்தை ரவுண்டு கட்டிய கனமழை - 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை, சென்னை? வானிலை நிலவரம்
TN Rain Alert: தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
TN Rain Alert: சென்னையில் இன்று கனமழைக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
வலுவிழந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகரும் எனவும், இதனால் இந்த வாரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழியக் கூடும் எனவும் கணிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து அதே இடத்தில் நீடித்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்து விட்டதாக மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டு இருந்த கனமழை எச்சரிக்கையும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:
aதேநேரம், வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கேரள கடலோரப் பகுதிளை ஒட்டி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. அதேபோல, வரும் நவம்பர் 16 வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது மழைக்கு வாய்ப்பு. ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.