‛நீங்களே காலி பண்ணிடுவீங்க போல...’ சபாநாயகர் பேச்சை வழிமறித்த அமைச்சர் துரைமுருகன்!
விஜயபாஸ்கரை நோக்கி பேசிய துரைமுருகன், ‛‛டாக்டர்... போதும்... நல்லா பேசுனீங்க... கிளீனா பேசுனீங்க... பலமுறை பாராட்டியிருக்கேன்.... இதோட முடிங்க...’ என கேட்டுக் கொண்டார்.
நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தின் போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது, நீட் என்கிற வார்த்தை எங்கிருந்து வந்தது? நீட் என்பதை அறிமுகம் செய்தது யார்? என்ற கேள்வியை எழுப்பி, அது தொடர்பாக காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஆணையை சுட்டிக்காட்டினார். அதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை எதிர்ப்பு தெரிவித்தார். விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து கூச்சலிட, சட்டமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
செல்வபெருந்தகையை கட்டுப்படுத்த சபாநாயகர் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து பேசினார். அப்போது, ‛‛அதிமுக நீட் ஆதரவாக இருப்பதை போன்ற தோற்றத்தை வெளியில் சிலர் உருவாக்குவதாகவும், அது பற்றி விளக்க வேண்டிய கடமை அதிமுகவிற்கு இருப்பதாகவும்,’’ பேசினார். அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ‛விஜயபாஸ்கர் பேசிய அனைத்தும் அவை குறிப்பில் இருப்பதாகவும், ஒன்னும் பிரச்சனை இல்லை... நீங்கள் அமரலாம்,’ என்றார். அதை ஏற்று எடப்பாடி பழனிச்சாமியும் அமர்ந்தார்.
பின்னர் விஜயபாஸ்கரை பேச அழைத்த சபாநாயகர், ‛டாக்டர்... இதை மட்டும் பேசி முடிங்க டாக்டர்... நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்... நீங்க தான் சொன்னீங்க... 1984ல் நுழைவுத் தேர்வு வந்தது என்று; அதுக்கு அப்புறம் நீட் மத்திய அரசு கொண்டு வந்திருக்கு...’ என்று சபாநாயகர் பேசிக்கொண்டிருந்த போது, குறுக்கிட்ட அமைச்சர் துரை முருகன், ‛நீங்களே... காலி பண்ணிடுவீங்க போலேயே...’ என சபாநாயகரை கேட்க, தனது பேச்சை அப்பாவு முடித்துக் கொண்டார்.
விஜயபாஸ்கரை நோக்கி பேசிய துரைமுருகன், ‛‛டாக்டர்... போதும்... நல்லா பேசுனீங்க... கிளீனா பேசுனீங்க... பலமுறை பாராட்டியிருக்கேன்.... இதோட முடிங்க...’ என கேட்டுக் கொண்டார். அதன் பின், மீண்டும் விஜயபாஸ்கரை பேசுமாறு அழைத்த சபாநாயகர், ‛‛ஆளுநர் திருப்பி அனுப்பியதை மட்டும் பேசுங்க...’ என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்று மீண்டும் தன் பேச்சை விஜயபாஸ்கர் தொடர்ந்தார்.
‛‛10.7.2019 ல் இதை அவையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மசோதா நிலை என்ன ஆனது என்று முதல்வர் கேட்டார். ஆளுனர் காரணம் சொல்லி திருப்பி அனுப்பியது போல, குடியரசு தலைவரும் சில காரணங்களை கேட்டு திருப்பி அனுப்பினார். அதை ஏன் திருப்பி அனுப்பினார் என்ற விளக்கமும் சட்டத்துறையின் மூலம் கேட்கப்பட்டது என்பதை அப்போது விளக்கமாக கூறியிருந்தோம் என்பதை இப்போது தெரிவித்துக்கொள்கிறேன்,’’ என்ற விஜயபாஸ்கர் பேசிய போது, காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் குறுக்கிட முயன்றனர். அவர்களை தடுத்த சபாநாயகர், ‛விஜயபாஸ்கர், தற்போதைய சூழலை பற்றி பேசுமாறு,’’ கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்