COVID-19 Vaccine : மெகா தடுப்பூசி முகாம்: ‛1 கோடி டோஸ் வேண்டும்’ -அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
தமிழ்நாட்டில் நடத்த உள்ள கொரோனா வைரசுக்கு எதிரான மெகா தடுப்பூசி முகாமிற்காக கூடுதலாக 1 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். மெகா தடுப்பூசி முகாமிற்கு தேவையான தடுப்பூசிகளை அளிக்க வலியுறுத்தி இந்த கடிதத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “ கொரோனா வைரசுக்கு எதிராக தமிழ்நாடு போராடுவதற்கு இடைநில்லாது கொரோனா தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கு நன்றியை தெரிவிக்கிறேன். மத்திய அரசு கடந்த 5-ந் தேதி வரை தமிழ்நாட்டிற்கு 3 கோடியே 31 லட்சத்து 84 ஆயிரத்து 824 டோஸ்களை விநியோகித்துள்ளது. மேலும், 1 கோடியே 83 ஆயிரத்து 95 ஆயிரத்து 400 ஏடி சிரஞ்சுகளை மாநிலத்திற்கு அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 2.63 கோடி நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 68.91 லட்சம் மக்களுக்கு இதுவரை இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட தடுப்பூசிகள் அரசு கொரோனா தடுப்பூசி முகாம் மூலமாக செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 7 தினங்களாக தமிழ்நாட்டில் தினசரி 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது கையில் இருப்பில் உள்ள தடுப்பூசிகள் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. இதை வைத்துக் கொண்டு எஞ்சிய மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது கடினமாக உள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. எல்லையோரத்தில் உள்ள மாவட்டங்களில் தகுதியுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரள எல்லையில் உள்ள கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு 65.67 லட்சம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் அடுத்த கட்டமாக மெகா தடுப்பூசி முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம். வரும் செப்டம்பர் 12-ந் தேதி முதல் வாரந்தோறும் இந்த முகாமை நடத்த திட்டமிட்டுள்ளோம். 18 வயதுக்கு மேற்பட்டு தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேற்கூறிய மெகா கொரோனா தடுப்பூசி முகாமை கருத்தில் கொண்டு ஒரு தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளாக ஒரு கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.