Governor RN Ravi: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவகத்துக்கு அனுமதி கிடையாது - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகளாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது நமது நாடு. நாமெல்லாம் அவர்களது குழந்தைகள் என திருவண்ணாமலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை வந்துள்ளார். இன்று, முதல் நிகழ்வாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்களுடன் ஓர் சந்திப்பு மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார்.
அவருக்கு சாதுக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, விபூதி பூசிவிட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிறகு ஆளுநர் அவருடைய கைகளால் சாதுக்களுக்கு மதிய உணவு பரிமாறினார். அப்பொழுது தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “திருவண்ணாமலை ஆன்மீக பூமி. சிவன் வாழும் பூமி. நினைத்தாலே முக்தி தரும் பூமி. அருணாசலேஸ்வரர் மண்ணில் கால் வைத்தது பெருமையாக நினைக்கிறேன். நமது நாட்டில் ரிஷிகளாலும் சாதுக்களின் தவத்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட நாடு. நாம் அனைவரும் அவர்களின் குழந்தைகள். சனாதன தர்மம் என்பது தனிமனிதனுக்கானதல்ல பாரத தேசத்திற்குரியது ஆகும். பறந்து விரிந்த பிரார்த்தனையே சனாதன தர்மம் ஆகும்.
இந்த நாடு 1947 இல் உருவாக்கப்பட்டதல்ல 1947-ல் விடுதலை மட்டுமே அடைந்தோம், பாரத நாட்டின் ஆன்மீக தலைநகர் இந்த மாநிலம் என்பது எனக்குத் தெரிந்தது. ரிஷிகள் சாதுக்கள் நாம் யார் என்பதை உணர்த்தியுள்ளார்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்பதே சனாதன தர்மம் ஆகும். நமது ஆன்மீக வளர்ச்சி நமக்கு மட்டுமானது அல்ல உலகிற்கே ஆனது. மற்ற நாடுகள் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை ஆகும். ஆனால் நமது நாடு ரிஷிகளாலும் சாதுக்களின் தவத்தாலும் உருவாக்கப்பட்ட நாடு. பாரத நாட்டின் ஆன்மீக தலைநகராக தமிழ்நாடு உள்ளது என்பது எனக்கு தெரியவந்துள்ளது. ரிஷிகள், சாதுக்கள் அனைவரும் நாம் யார் என்பதை உணர்த்தியுள்ளார்கள். ஆன்மீகத்தை தவிர்த்து மற்றதில் கவனம் செலுத்தினால் மேற்கிந்திய நாடுகள் போல நம் நாடு ஆகிவிடும்.
முழுமையான முன்னேற்றத்தை நோக்கி நாடு நடை போடுகிறது. நமது ஆன்மீக வளர்ச்சி நமக்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஆனது ஆகும். போர் இயற்கை சீற்றம் ஆகியவைகள் மனிதனின் எதிர்மறை விளைவுகளால் வந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் அமைதியான பூமி. கிரிவலம் வருவது மன நிம்மதியை தரக்கூடியது. உலக அளவில் இந்தியா ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை உடைய நாடு. கிரிவலப் பாதையில் தங்கியுள்ள சாதுக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆன்மீகவாதிகள் ஆசிரமத்தை வைத்துக்கொண்டு சேவை செய்வதை விட மற்றவர்களுக்கும் சேவை செய்ய முன்வர வேண்டும். கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் இருப்பதற்கு அனுமதி கிடையாது. இதை அகற்ற முடிந்தவரை நான் நிறைவேற்றி தருவேன்” என்று பேசினார்.