Kalaignar Kanavu Illam: ஜூலையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் .. முதலமைச்சர் ஸ்டாலினின் அடுத்த அதிரடி!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கனவு திட்டமான குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தமிழ்நாடு அரசு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அவர் தலைமையிலான அரசு பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கனவு திட்டமான குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தினை ஏற்கனவே அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து விட்ட நிலையில் இந்த திட்டத்துகான பணிகள் மீண்டும் சுறுசுறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கான பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வரும் ஜூன் 25ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டியலை வரும் ஜூன் 30 ஆம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 10ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ₹3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.