PTR Abt. Internet: என்னது.. மாசம் இவ்ளோ கம்மி விலைல வீடுகளுக்கு இன்டர்நெட்டா.? அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு...
தமிழ்நாட்டில், வீடுகளுக்கு குறைந்த விலையில் நிறைந்த வேகத்துடன் கூடிய இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை மூலமாக, வீடுகளுக்கு குறைந்த மாத கட்டணத்தில் இணைய வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
இன்றியமையாததாகிவிட்ட இன்டர்நெட்
தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த இன்றைய காலகட்டத்தில், இன்டர்நெட் எனும் இணைய வசதி இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலை ஆகிவிட்டது. சிறிது நேரம் இணையம் வேலை செய்யவில்லை என்றால், உலகமே ஸ்தம்பித்துப் போகிறது. அந்த அளவிற்கு இன்றியமையாததாகிவிட்டது இணையம்.
பெட்டிக் கடையில் தொடங்கி பெரிய மால்கள் வரையிலும், கல்வி, வேலை என அனைத்துமே இன்டர்நெட் மயம்தான். இத்தகைய இணைய சேவையை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல்வேறு விலையில், பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன. இதற்காக மாதம்தோறும் குறைந்தபட்சம் 1000 ரூபாயாவது வைத்தாக வேண்டும். ஏனென்றால், டிவி, செல்போன் என அனைத்துமே தற்போது இணையத்தில் தான் இயங்கி வருகிறது.
இத்தனைய சூழலில், குறைந்த விலையில் திருப்திகரமான வேகத்துடன் கூடிய இணைய சேவை கிடைத்தால் நல்லதுதானே.? அதைப் பற்றிதான் இன்று சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன.?
இன்று சட்டப்பேரவையில் பேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை மூலமாக, வீடுகளுக்கு குறைந்த மாத கட்டணத்தில் இணைய வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாதம் 200 ரூபாய் கட்டணத்தில், 100 Mbps வேகத்துடன் கூடிய இன்டர்னெட் வசதியை வீடுகளுக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், 4,700 கிராம பஞ்சாயத்துகளிலிருந்து இன்டர்நெட் வசதி கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்த கிராமங்களுக்கு உரிய வசதிகள் இருக்கும் இடங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இத்திட்டம் மூலம், ஏற்கனவே 2,000 அரசு அலுவலகங்களுக்கு இணைய வசதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்த திட்டம் வீடுகளுக்கும் விரிவடையும் பட்சத்தில், மாதாமாதம் ஆயிரக்கணக்கில் இன்டர்நெட் கட்டணம் செலுத்துவோருக்கு நிச்சயம் பணம் மிச்சமாகும் என்பதில் சந்தேகமில்லை.





















