Udhaynidhi On Vijay: ”அந்த அறிவு கூடவா இல்லை” - சினிமாக்காரர் விஜய்க்கு பதிலடி தந்த உதயநிதி
Udhaynidhi On Vijay: விஜய் பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்பான கேள்விக்கு, சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என உதயநிதி பதிலளித்துள்ளார்.
Udhaynidhi On Vijay: திமுக பற்றிய விஜயின் பேச்சு தொடர்பான கேள்விக்கு, சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு தொடர்பான கேள்விக்கு, ”தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் மக்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த அறிவு கூடவா இல்லை அந்த ஆளுக்கு” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேநேரம், அம்பேத்கர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவை, சினிமா செய்திகள் என கூறுவதா என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உதயநிதிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் சொன்னது என்ன?
”எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய விஜய், “ இங்கு நடக்கும் பிரச்னைகளுக்கு சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடுவதும், சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதும், மக்களுடன் இருப்பதாக காட்டிக்கொள்வதும், சம்பிரதாயத்துக்காக மழை தண்ணியில் நின்று போட்டோ எடுப்பதிலும் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. நான் மக்களோடு இருப்பவன்.
மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கான அடிப்படை சமூக நீதி பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களுடன் இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால், நீங்கள் உங்கள் சுயநலத்துக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்களின் கூட்டணி கணக்குகள் அனைத்தையும், 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” என திமுகவை விஜய் மறைமுகமாக சாடினார்.
ஆதவ் அர்ஜுனா சொன்னது என்ன?
அதே நிகழ்ச்சியில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “
பாஜகவை தமிழ்நாட்டில் ஒழித்துவிட்டோம். 2026ல் தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இனி பிறப்பால் முதலமைச்சர் உருவாகக் கூடாது. தமிழ்நாட்டில் ஒரு பொதுத்தொகுதியில் இன்று வரை ஒரு தலித் வேட்பாளரை நிறுத்த முடியவில்லை, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என ஏன் சொல்லக் கூடாது?” என பேசினார். இதுதொடர்பான கேள்விகளை எழுப்பியபோது தான், சினிமா செய்திகளை பார்ப்பது இல்லை எனவும், ஆதவ் அர்ஜுனாவை ஒருமையிலும் குறிப்பிட்டு உதயநிதி பேசியுள்ளார்.