TN CM Stalin: பட்டா, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்டங்கள் காலதாமதமாகக் கூடாது - அதிகாரிகளிடம் முதலமைச்சர் கறார்..!
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
TN CM Stalin: ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (6.2.2023) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி. சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள், பெண் கல்வி சிறப்பு ஊக்கத்தொகை திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் விடுதிகள் பராமரிப்பு. இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல், மயானப் பாதை வசதி ஏற்படுத்தித் தருதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவை குறித்தும், இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வரும் புதிய திட்டங்கள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் எனவும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி மாணவர் விடுதிகளை கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளாக மாற்றப்பட வேண்டும் எனவும், எந்தவித தாமதமின்றி, உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக நில நிர்வாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்கள் பயனாளிகளுக்கு முறையாக அளந்து காட்டப்பட வேண்டும் என்றும், அங்கு அவர்கள் வீடு கட்டி குடியேறுவதற்கான வசதிகளையும் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு வாரமும் ஊரக வளர்ச்சி துறையுடன் இணைந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்றும், பிரதம மந்திரி முன்னோடி கிராம திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தி பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்தார்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, வேலைவாய்ப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை எவ்வித தாமதமும் இன்றி வழங்கப்பட வேண்டும் என்றும், குடியிருப்புகள் மற்றும் ஓய்வூதியம் கோரி வழங்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படுகிறதா என்பதை துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.மாவட்ட மற்றும் உட்கோட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டங்கள் மாதந்தோறும் நடத்திட வேண்டும் என்றும், பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு பணியை நிலுவையின்றி விரைந்து முடித்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம், தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் ஆகிய வாரியங்களில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை சேர்த்து வாரிய உறுப்பினர்களின் தேவைகளின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் , கிராமப்புறங்களில் மயான வசதி மற்றும் மயான வழி பாதை அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும். இத்துறைக்கென ஒதுக்கப்பட்ட நிதிகளை முழுமையாக செய்திடவும் அறிவுறுத்தினார். செலவு செய்திடவும் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மதிவாணன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆய உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.