“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்றே அரசிதழில் வெளியிடப்படும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்றே அரசிதழில் வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்றே அரசிதழில் வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது அதிகரித்து வருகிறது. இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதனை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில்,கடந்தாண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்ட மசோதா சட்ட மன்றத்தில் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு உடனடியாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து அக்டோபர் 19 ஆம் தேதி சட்ட மன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
இந்த சட்ட மசோதா தொடர்பாக ஆளுநர் தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கமும் தரப்பட்டிருந்தது. ஆனால் கிட்டதட்ட 131 நாட்களாக ஒப்புதல் அளிக்காமல் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மார்ச் 8 ஆம் தேதி இந்த சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். மேலும் இதுகுறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒப்புதல் அளித்த ஆளுநர்
இதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று மீண்டும் சட்ட மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி மார்ச் 23 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இரண்டாவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைக்கப்பட்ட மசோதா குறித்து பொதுவெளியில் தெரிவித்த கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்றது.
இன்று காலை ஆளுநரின் செயல்பாடும் குறித்து விவாதிக்கும் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்
இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இன்று காலை நாம் நிறைவேற்று அனுப்பிய அரசினர் தனித்தீர்மானத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டியிருந்தோம். இதனால் தமிழ்நாட்டின் நிர்வாக நலனும், இளைஞர்களின் எதிர்காலமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டியிருந்தோம்.
மேலும் பொதுவெளியில் ஆளுநர் தெரிவித்து வரும் சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். இந்த சூழ்நிலையில் இன்று மாலை ஆளுநர் ஆன்லைன் சூதாட்டம் தடை தொடர்பான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டமானது இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என்பதை அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.