Blue Flag Certification: பி.டி.ஆர் சொன்ன நீலக்கொடிச் சான்றிதழ் என்றால் என்ன?
இந்த திட்டத்தில் தற்போது நாற்பத்தேழு நாடுகள் பங்கேற்கின்றன, மேலும் 4,573 கடற்கரைகள், மரினாக்கள் மற்றும் படகுகள் இதுவரை இந்த சான்றிதழைப் பெற்றுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துறைவாரியாக பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் பி.டி.ஆர்., பழனிவேல்ராஜன் சுற்றுச்சூழல் துறைக்கு பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “இந்தியாவில் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும். மாநிலத்தில் ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்த ‘தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்’ ஏற்படுத்தப்படும். ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும். ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அடுத்த 5 ஆண்டுகளில், சர்வதேச நீலக் கொடி சான்றிதழை (Blue Flag Certifcate) பெறுவதற்காக, உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டது.
நீலக்கொடிச் சான்றிதழ் நமக்குப் புதிதல்ல. இந்தியாவில் உள்ள எட்டு கடற்கரைகளுக்கு புகழ்பெற்ற 'நீலக் கொடி' சான்றிதழ், சர்வதேச நடுவர் மன்றத்தால் வழங்கப்படுகிறது, இந்த நடுவர் மன்றத்தில் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO), சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE) மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) ஆகியன அடங்கும். இதுவரை இந்தியாவிலிருந்து கேரளாவின் கப்பாட், குஜராத்தின் சிவராஜ்பூர், டியூவின் கோக்லா , காசர்கோடு, படுபித்ரி, ஆந்திராவின் ருஷிகொண்டா,ஒடிசாவின் கோல்டன் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ராதாநகர் கடற்கரை ஆகியன நீலச்சான்றிதழ் பெற்றிருக்கின்றன.
இந்த நீலக்கொடிச் சான்றிதழ் என்றால் என்ன?
'நீலக் கொடி' என்பது கடற்கரை, உல்லாசப் படகுத்துறை (Marina) அல்லது படகு சவாரி சுற்றுலாத் தளத்தை இயக்குபவர்கள் பெறக்கூடிய சான்றிதழ், மேலும் இது கடற்கரையின் சூழல் தரத்துக்கான அடையாளமாக (eco-label) செயல்படுகிறது.இந்த சான்றிதழ் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளையின் உறுப்பு நாடுகளில் உள்ள கடற்கரைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. டென்மார்க்கை மையமாகக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழல் கல்விக்கான லாப நோக்கற்ற அறக்கட்டளையால் இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது விண்ணப்பதாரர்களுக்கான கடுமையான அளவுகோல்களை நிர்ணயித்து அதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
நீலக் கொடி சான்றிதழ் திட்டம் 1985-ஆம் ஆண்டில் பிரான்சிலும் 2001ல் ஐரோப்பாவுக்கு வெளியிலும் தொடங்கப்பட்டது. நீர் தரம், சுற்றுச்சூழல் மேம்பாடு, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பாதுகாப்பு என நான்கு முக்கிய அளவுகோல்களின் மூலம் நன்னீர் மற்றும் கடல் பகுதிகளில் நிலையான வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.
இந்த திட்டத்தில் தற்போது நாற்பத்தேழு நாடுகள் பங்கேற்கின்றன, மேலும் 4,573 கடற்கரைகள், மரினாக்கள் மற்றும் படகுகள் இதுவரை இந்த சான்றிதழைப் பெற்றுள்ளன.