Annamalai: "விமான எமர்ஜென்சி கதவில் தேஜஸ்வி கை தான் வைத்தார்" - மாற்றி மாற்றி பேசும் அண்ணாமலை: என்னதான் உண்மை?
பாஜக இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா விமானத்தின் எமர்ஜென்ஸி கதவை திறந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
பாஜக இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா விமானத்தின் எமர்ஜென்ஸி கதவை திறந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி இண்டிகோ விமானத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையும், பாஜக இளைஞரணி தேசிய தலைவரும், எம்பி.,யுமான தேஜஸ்வி சூர்யாவும் பயணம் மேற்கொண்டனர். அப்போது தேஜஸ்வி சூர்யா அவசர வழி கதவை திறந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 29, 2022
விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை (1/2)
இதனால் பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கவிடப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதனால் கிட்டதட்ட 3 மணி தாமதமாக விமானம் கிளம்பியதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட ட்வீட்டின் மூலம் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து சர்ச்சையை கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி தருமபுரியில் பேசிய அண்ணாமலை, சமீபத்தில் நான் ஏதோ ஒரு விமானத்தில் சென்றபோது அவசர வழி கதவை பிடித்து இழுத்து விட்டதாக சொல்கிறார்கள். அந்த சம்பவத்தில் தனக்கு தொடர்பில்லை என தெரிவித்தார். மேலும் விமானத்தில் திமுககாரர்களை ஏற்றினால், அவர்கள் எமர்ஜென்சி கதவைத் திறந்து அங்கும் 4 பேரைத் தொங்கவிட்டுக் கொண்டுத் தான் செல்வார்கள். அப்படி ஒரு கதவு இருப்பது தெரியாததினால்தான் விமானமும், பயணிகளும் பத்திரமாக இருக்கிறார்கள் என பதிலடி கொடுத்தார்.
அதேசமயம் கதவு திறக்கப்பட்ட சம்பவம் உண்மை தான் என சொன்ன இண்டிகோ நிறுவனம், கதவை திறந்தவரின் பெயரை வெளியிடவில்லை. இதனிடையே இந்த விவகாரம் குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் இவ்விவகாரம் குறித்து பேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா, அவரச வழி கதவு திறக்கப்பட்ட சம்பவத்தில் பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டுவிட்டதாக கூறினார். இதன்மூலம் இந்த சம்பவம் உண்மை என்பது உறுதியானது.
2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி. pic.twitter.com/yzWrd97dxs
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) January 17, 2023
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் புது விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகா மாநிலம் சிக்மங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விமான அவசர வழி கதவை தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை. அவர் தனது கைகளை கதவின் மீது வைத்திருந்தார். அப்போது கதவு சரியாக மூடப்படாததை கவனித்து ஊழியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இது தொடர்பான விளக்கமும் விமான நிறுவனத்திற்கு தேஜஸ்வி அளித்துள்ளார். கதவு திறந்ததற்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக விமானம் தாமதமானதற்கு தான் அவர் மன்னிப்பு கேட்டார் என அண்ணாமலை கூறியது மீண்டும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.